Monday, May 9, 2011

நரனின் உப்புநீர் முதலை - ஒரு வாசகப் பார்வை-நேசமித்ரன்

உப்பு நீர் முதலை - நரன்

உப்புநீர் முதலை - இந்த தொகுப்பின் தலைப்பில் தொனிக்கும் நுண்சுட்டல் குரலே நரன் கவிதைகளின் டெசிபல் அலகாய் இருக்கிறது. பொதுமையான விளிகளுடன் வாசகனுக்கான பிரதிவெளியை விரிக்கும் கவிதை மரபில் இருந்து விலகி கண்ணாடி வெட்டும் ஸ்க்ரைபர் சொல்லாடல்களால் தன் கவிதையை முன் வைக்கிறார்.

(இடைக் குறிப்பு -1 - விமர்சனம் என்பது தீர்ப்பு வாசித்தல் எனப்படுவதில் முற்றும் முரண்படும் வாக்கியங்களை நம்பும் அகவெளி, விமர்சகன் தன் தர்க்க மற்றும் உணர்வு நிலைக்கு அணுக்கமான பழகிய கண்ணோட்டத்தினை துறந்து பிரதியை அணுக வேண்டுமென்பதில் தீர்க்கமாய் இருக்கிறதாதலால் முன்/பின்வரும் சொற்கள் வாசகக் குறிப்புகளாகவும்,நெஞ்சோடு கிளத்தலாகவும் வாசிக்கப்படக் கடவது .)

தொகுப்பின் மஜ்ஜைகளில் ஜென் பிரகாரங்களின் வௌவால் வீச்சமும் குழந்தைகள் உலகின் கால எந்திரப் பயண முகில் துகள்களும்.Metrical Verse என்பதைக் கடந்து உள்ளிருக்கும் Philosophical acuity இதன் பிரத்தியேகம். வகைப்பாடுகளின் வழி இவை சிலேடை,யமகம்,மடக்கு மற்றும் சித்திரக்கவி எனக் கொள்கிறேன்.

கண்மாய் நடுவே
உலகின் முதல் நாளில் ஒரு நுனியும்
கடைசி நாளில் மறு நுனியும் கட்டி
சேலை
காய வைக்கும்
பெண்ணைக் கண்டேன்

என தேவதச்சன் எழுதிய ’காலத்திற்கு’ அணுக்கமாயும்
………
வெளி சிறுத்துக் குறுகும்போது காலமும் ஒடுங்கி
விடுகிறது.
உன் அடர் வழி நினைத்துக் கலங்கும்
தொலைவு தொலைந்து கொண்டிருக்கும் மஹா விருக்ஷம் அகண்ட வருஷம்
ஒரு சாண் இடுப்பில் அடங்கி விடும்

என்ற பிரம்மராஜனின் வரிகளுக்கு எதிர்நிலையிலும் இயங்க முற்படுகிறது.

கிடுக்கிகளற்று சகலத்தையும் தீண்டிப் பார்க்க விரும்பும் புசித்துப் பார்த்து விட விரும்பும் குழந்தையின் மார்பக ஞாபகம் உள்ள கண்களும் ரேகைகளும் மாளாது வைத்திருக்கும் மாங்கருவண்டும் தேரையுமாய் ஓவியனாயும் கவிஞனாயும் இருந்தியங்கும் மனவெளியின் வார்ப்புகள்.

காலத்தின் சார்பு நிலையில் இருந்து நீட்சிக்கு நகர்த்தும் உள்ளுணர்வின் (intuition) சொல் விளையாட்டுகள் வழி அஃறிணை உயர்திணை தீர்ந்த பொதுத்திணை வாழ்வின் இயங்கியபடி இருக்கும் கணங்களை மொழிக்கு கடத்தி இருக்கிறார் நரன்.பிரக்ஞை தொலையும் கணத்திற்கு விரும்பி நகரும் தருணவெளி வர்ணங்களால் ,எண்களால் ,கோடுகளால், மிருகங்களால், பறவைகளால்,கோணங்கள் மற்றும் பாகைகளால்

சுமத்தப் பெற்றிருக்கும் அடையாளங்கள் மீதான வினவுதலை வடிவங்கள் உடனான சார்பு / உறவிலி நிலையை க்யூப் விளையாட்டு சதுரத்துள் இருக்கும் சதுரங்கள் போல் மாற்றி மாற்றி அடுக்கிப் பார்க்கிற கவிதைகளில் பெயர்கள் ,க்ளிப்புகள் நீருமிழ்வுகள் பரீட்சித்தபடி உலகை அணுக முனைகின்றன


இன்மைக்கும் இருப்புக்குமான இடத்தை சப்தத்தால் பிணைத்தல் துவங்கி எதிர் விளிம்புகளை முடிச்சிட முயலும் காரணிகளில் மைய இழை என இருக்கிறது /இருந்தது /இருக்கக் கூடும் காலம், காலம் மேலும் காலம்

வரிக்குதிரைகள் ,கொக்குகள், முதலைகள்,சிறுவர்கள் ,சிறுமிவழி தன் பால்யத்திற்கு சென்று மீளும் பேரிளம்பெண் ,முயல்கள் & இருதலை சர்ப்பங்கள் என பாடு பொருட்களில் தண்டவாளத் துண்டுகளின் இணைகோட்டுத்தன்மையும் கோடை இடைவெளியும் குறுக்கு கட்டைகளின் பிணைப்பும் இருக்குமாறு கவனமாயிருக்கிறார்.தன் வாலுண்ணும் பாம்புகளின் சித்திரமும் தம் குறி சுவைக்கும் ஈருடல் யாளிகளும் பிம்பமாக்கும் கவிதைகள்.

கவிதைச் சொல்லி தேர்ந்திருக்கும் வர்ணங்கள் வெளிர் தன்மையுடன் ஒரு சீருடை பாவத்தை வாக்கியங்களில் அமர வைப்பனவாய் இருக்கின்றன. நன்மை X எதிர் நன்மை என்பதில் துவங்கி பைனரிகளை அடுக்குதல் மூலம் பிறிதொன்றாய் விரியும் கவிதைகளை எழுதி இருக்கும் நரன் தனதான உலகின் பார்வைக்கு நம்மை பழக்குகிறார்.மொத்தமாய் வாசித்து முடித்ததும் கட்டப்பட்ட கண்களை அவிழ்த்ததும் வரும் நிறக்குருட்டுத்தனம் வாய்க்கிறது.

இசைக்குறிப்புகளில் மௌனத்திற்கான கனம் போலவே சொற்களிடையே (Diction) இருக்கும் தசம இடைவெளிகளில் இராணுவக்கால்களின் பாகை மாறாத குறுங்கோணங்கள் .
(இடைக்குறிப்பு -2 Though it’s futile & lame quest as penning poetry is framing the momentum of madness…)


ஒரு பறவைப் பார்வையில் பிரார்த்தனை கூடத்தின் பெஞ்சுகளின் முன் மண்டியிட்டிருக்கும் செவிலியரின் பிம்பம் வந்து போகிறது.
நுட்பத்தை பேசும் அதே நேரம் லேபிள் ஒட்டப்பட்ட மியூசிய கண்ணாடிக் கூண்டுகள் போன்ற உலர்தன்மையும் தோன்றக் கூடும் மீள்வாசிப்பில்.

தொடர்ச்சியான கவிதை செய்தலில் கைக்கொண்டிருக்கும் வடிவம் பின் வரும் எதிர்நிலை நிறங்கள் மற்றும் எண்கள் வழி அமையவிருக்கும் பின்னல் கண்ணிகளை (Looping Elements of text)அனுமானங்கள் மூலம் நிறுவிப் பார்க்க முயலும் வாசக மனத்திற்கு ஒரு மாற்று மொழிதல் அவசியமாய் இருக்கிறது என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டியவராகிறார் கவிதைச் சொல்லி

காலாவதியான பிரச்சாரத்தொனி அற்ற, வாதையின் நோய்மை படிந்த பிளாஸ்டிக் பதங்களால் எழுதப் பெறும் சாம்பல் வாக்கியங்களில் இருந்து துண்டிக்கப் பெற்ற, புரட்சிகர துணுக்குகளால் ஆன எரிந்த மோட்டாரின் தாமிர வாடை வீசும் மொழிதலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் பழங்குகையின் இடுக்குவழி கசியும் கீற்றொளியில் அசையும் சிலந்தி வலை. ஆனால் பார் விளையாட்டுக்காரனின் அந்தர அலைவைப் பார்க்கும் அடிநெஞ்சில் சப்தமிடும் பெண்டுலம், கவிதை வாசிக்கும் ஆசிய மனதின் தேவையாய் இருக்கிறது.

கவிஞனுள் இருக்கும் ஓவியனின் கோடுகள் செதுக்கும் வாக்கியங்களின் நேர்மை வழி மாய யதார்த்தத்தை விழையும் ப்யூசன் மனம் பருவங்களை மீட்டெடுக்கவும் பின் சென்று நுகரவும் எத்தனப் படுகிறது. இருவேறு புலங்களின் பௌதீக உடலங்களை பொதுமைப் படுத்தும் வேதியல் சமன்பாட்டை நிறுவி விட்டு தன் பேனாவை எடுத்துக் கொள்கிறார் நரன். சட்டப் புத்தகத்தின் ஷரத்துகளை எழுதும் அதி கவனத்துடன் ஒரு ஏவுகணையின் குறையும் மைக்ரோவிநாடிகளால் இறுதி வரியை நோக்கி நகர்கிறோம் நாம்.அனுமதிக்கப்பட்ட தொட்டி வெளிகளில் அந்தரங்கங்கள் ஏதுமற்ற மீன்களின் இனப் பெருக்கமென கண்காணிப்பின் ஆய்வுமேசையில் நெளிந்து கொண்டிருக்கின்றன குழந்தைமையின் சுவடுகள் மற்றும் தண்டனைகள்.

வாசிக்கப் பெறுகிற எந்த கலாச்சாரப் புலத்திலும் (In any given culture) சிற்சில பெயரியல் மாற்றங்களுடன்,. திகழ்ந்து கவன ஈர்ப்பை பெற்று விடக் கூடிய வகைமையில் பொருந்துகிற கவிதைகளாக இருப்பது புதிய திறப்புகளை நோக்கி நகர வாய்ப்புகளை வைத்திருக்கிறது கவிதைச் சொல்லிக்கு.

புனைவில் மெய்மைக்கு அணுக்கமாக நகரக் கூடிய ஒப்பீட்டு இருப்பு (Verisimilitude)வாசகனின் தர்க்க மனத்தின் வழியே கிளைக்கும் வெளியேற்றம்/விடுதலைக்கு இணக்கமான படிம வெளியை உருவாக்குவதில் நரன் எய்த வேண்டிய உயரங்கள் இன்னும் உண்டு.

Onomatopoeia என்று செப்பலோசைக்கும் செயலுக்கும் தொடர்புடைய சொற்களை அழைப்பது போன்று வடிவத்திற்கும் வினைக்குமான பிணைப்பை (Hyperbole) நுட்பமான வகைப்பாட்டில் மொழிப்படுத்தியிருக்கிறார் உலகத்தை அணுகுதல் துவங்கி தொடரும் கவிதைகளில்…

பதினாறாம் நூற்றாண்டின் ஜார்ஜ் ஹெர்பர்ட்-ன் ’ஈஸ்டர் சிறகுகள்’ என்ற வாசிக்க/காண வாய்த்த முதல் பேட்டர்ன் கவிதை. இரண்டு பறக்கும் பறவைகளின் சித்திரத்தை காட்சிப்படுத்தும் இக்கவிதை முறை வழி நரனின் படிமங்கள் உருவாக்குவது குழந்தைகளின் உலகம்.

Practical lexicography என்னும் அகராதி அடுக்குமுறையின் சாயலில் நேர்- நேர் பொருள் கொள்ளும் தசாப்தத்திற்கு முன் துவங்கிய சொல்முறையின் பரவலால் பாதிப்புறாமல் பிரதியின் ஆன்மா வாசகனின் ரேகைகளுடன் உருப்பெறும் ஈரப் பதுமையாக பிறிதொன்றாகும் இடத்தில் புனை பிரதிகள் நரனல்லாத தனித்ததொரு பிம்பத்தை உருவாக்க முயல்கின்றன. கனிகளை காட்டிக் கொடுக்கும் பறவையின் சப்தம், கவித்துவம் கோரும் கவனயீர்ப்பு.

நீரின் மேல் இலையைப் போல் நகரும் நீர்பறவையின் கால்கள் கவிதையில் சொல் மற்றும் வாசகப் புரிதல்.ஒரு பெருவெடிப்பு கணத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை எளிய சூத்திரத்துள் எழுதிப் பார்க்கும் கவிதைகள் முன்முடிபுகள் நிரப்பப் பெற்ற கணிதங்கள் கடந்து திறக்கும் ஆகாயத்தின் கோளடுக்குகள் மற்றும் பால் வெளித் தூசுகளுடன்.அணுக இலகுவான மொழி வழி கவிதைச் சொல்லி உயிர்ப்பிக்க விரும்பிய பிரபஞ்சத்தின் சாத்தியம் வாசகனின் தோலுரியும் கரத்தின் தொங்கல்களில்.

புரிதல் குறித்த அவதானச் சிக்கல் (Decoding the text) புழக்கத்தினால்
மட்டும் கடக்கக் கூடிய சொல்லமைவுகள் பெரிதும் அற்ற தொகுப்பாய் இருக்கிறது.பிரதியின் குவிமையம் ஏழு கடல் /மலை கடந்து ஒளித்து வைக்கப் பெறுவதாய் இல்லை திசைகாட்டியும் வழித்தட வரைபடமும் வழங்கி பயண ருசியை வாசகனுக்கு வைக்கிறார் நரன்.

பழகிய மன அமைப்புகளுக்கான துயரத்தீனி அல்லது உணர்வு ரீதியான ஒத்தடங்கள் இன்றி சீசா பலகையின் மேல் நிலை நொடியில் ஒரு புகைப்பட பிளாஷ் கணத்தை தாளுக்கு கடத்தும் பிக்செல் ஓவியக்காரரின் தொகுப்பென இருக்கிறது.

சூதாட்ட சோழிகளின் கடல் மூலங்களில் நகர்ந்த தூரங்களை வெளியுருண்டு கட்டங்களுக்குள் நகர்த்துகின்ற வித்தையுள்ள சொற்களை கண்டறிவது கவிஞனின் ஆகச் சிறந்த சுவாசத்தின் உஷ்ணம்.பிறகான கவிதைகளில் நிகழ விரும்பும் கோளியக்கங்களுக்கான வேர் தூவிகள் இந்தக் கவிதைகளில் இருந்தே ஆக வேண்டுமென்பதும் இல்லை.

தொப்பூல்வழி X புலன் ஊடக வழி வளரும் ஈருடல் தன்மை மற்றும் எந்திரங்களுக்கான கடவுச்சொல் சேமிப்பறையாய் மாறி இயங்கும் நியுரான் உலகம்.ஒரே பற்பசையை, மருந்துகளை ,நோய்களை, ஆணுறைகளை கொண்ட குளோனிங் மனித சமூகத்தின் அறிபிம்பங்களாய் சீருடைத்தன்மையுள்ள கவிதைகள் உப்பு நீர் முதலையின் செதிலெங்கும். ரிச்சர்ட் டட்டில் – ன் ஓவியங்களை அணுகும் அதிகவனத்துடன் தொகுப்பின் ஓவியங்களையும் உள்வாங்கப் பணிக்கிறது நேர்த்தி
தோற்ற மயக்கங்களும் ,காட்சிப் பிழைகளின் ஒளிவிலகல் சித்திரங்கள் மீதும் புனையப் பெறும் கவிதைகளின் ஊடக வெளியை மறுத்து வர்மப் புள்ளியறிந்த அக்குபஞ்சர் ஊசிகள் செருகப் பட்ட உடலமாய் சல்லித்த சொற்களுடன் இருக்கிறது முதலை நீந்தும் தவிட்டு நிற மணலின் கோடுகள்.தனதேயான மொழிச் செறிவுடன் தொடர்ந்து இயங்கி வரும் கவனத்திற்குரிய இந்த தொகுப்பின் மூலம் புதியவெளிகளை கண்டறியும் வாசகனுக்கும் உரையாடலைப் பகிர்வோம் .

இளங்கோ கிருஷ்ணன்

நரனின் மீபொருண்மைவெளி - உப்பு நீர் முதலையுடன் ஒரு பயணம்

யாருமற்ற இடத்தில்
என்ன நடக்கிறது
எல்லாம்

நகுலனின் இந்த நவீன மீபொருண்மை கவிதையோடு இக்கட்டுரை துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மீபொருண்மை என்ற சொல் இந்தக் கட்டுரையில் Metaphysics என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கத்தில் மெட்டா எனும் சொல்லிற்கு beyond (கடந்த) என்று பொருள் மெட்டாபிசிக்ஸ் என்பதை பெளதீகம் கடந்தது என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம். வரலாற்றின் துவக்க காலம் முதலே மீபொருண்மையியல் என்ற துறையானது தத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. பொருட்கள் அல்லது விஷயங்கள் எனப்படும் மேட்டர்ஸ் என்பதின் இருத்தல் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அதன் பெளதீக இருப்பைப் கடந்து ஆராயும் ஒரு துறையாக மீபொருண்மையியல் இருந்து வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மானுட சேதன அறிவுக்கு அப்பாற்பட்டவகையில் சிக்கலானதாகவும், நுட்பமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்பற்றும் வேறு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையதாகவும் இருப்பதாக மனித மனம் எண்ணிய கணத்தில் மீபொருண்மை பார்வைக்கான தேவை தோன்றியிருக்க கூடும்.

எந்தப் பண்பாடாக இருந்தாலும் மீபொருண்மை கோட்பாட்டுகான தரிசனம் என்பது ஒரு படிமமாகவே தோன்றியிருப்பதற்கான சாத்தியம் அதிகம். அப்படிப் பார்க்கும் போது மீபொருண்மை என்ற கோட்பாட்டு உருவாக்கத்திற்கான கருவியாக கவிதையே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

மேலே குறிப்பிட்ட நகுலனின் கவிதையை நவீன மீபொருண்மை கவிதை என்று நாம் சொல்வோமாயின் செவ்வியல் மீபொருண்மை என ஏதாவது உள்ளதா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. மீபொருண்மை பார்வை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கு மட்டும் சொந்தமானதல்ல. அது வரலாற்றின் துவக்ககாலம் முதலே எல்லா பண்பாட்டிலும் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மனம் முழுதாய் சமைந்த எந்த ஒரு தொல்குடி சமூகத்திலும் மீபொருண்மை பார்வைதான் அதன் அடிப்படையான பண்பாட்டுக் கட்டமைப்புகளையே உருவாக்கியிருக்க கூடும் என்றே நாம் சொல்லிவிட முடியும்.

மேற்கில் மிகத்துவக்கத்தில் மீபொருண்மையியல் பேரளவில் தனிமனித ஆன்மீக சாதனைகளோடு தொடர்புடையதாகவே இருந்தது. அதனால் அது தவிர்க்கவியலாமல் மதங்களோடும் கடவுள்சார் கோட்பாடுகளோடும் அடையாளம் காணப்பட்டது. 17ம் நூற்றாண்டில் நவீனத்துவத்தின் வருகையும் தத்துவதளத்தில் தெகார்தேவின் கார்டீசிய ஆய்வுமுறைகளின் ஆதிக்கமும் மீபொருண்மையியலின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தின. பொருள் கடந்த உண்மை என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்த பொருள் முதல்வாதிகளின் நூற்றாண்டாக அது இருந்தது. தொடர்ந்து வந்த 18, 19ம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதிகளின் ஆதிக்கம் நீடித்த போதும் மீபொருண்மை சிந்தனைகள் மெல்ல நகர்ந்து புறவயமான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. ஹெகல், காண்ட், நீட்ஷே போன்ற சிந்தனையாளர்கள் இதைச் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பிரபஞ்ச மையம் என்ற இடத்தில் கடவுளை நீக்கி விட்டு இயற்கையை முன்வைத்த எமர்சன், தோரோ போன்ற சிந்தனையாளர்கள் வந்தார்கள். இதன் பிறகு உருவாகி வந்த மீபொருண்மை சிந்தனைகளையே நாம் நவீன மீபொருண்மையியல் என்கிறோம். நவீன மீபொருண்மை சிந்தனைக்கு மதத்தோடும் கடவுளோடும் நேரடியான உறவு என எதுவுமில்லை. அது விஞ்ஞான நிருபணவாதத்தை ஒரு எல்லை வரை ஏற்றுக் கொண்டு இறுதி உண்மையை நோக்கி நகர்கிற ஒரு பயணமாக உள்ளது. நவீன மீபொருண்மையியலாளர் என்கிற பதத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி எனக்கு உடனடியாக தோன்றுகிற ஒரு சிறந்த உதாரணம்.

ஹெய்டெக்கர் ”மீபொருண்மை ஒரு அறிமுகம்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரும் அவரின் சகாவான சார்த்தரும் இருத்தலியம் பேசியவர்கள் அதாவது இருத்தலின் அபத்தம் பேசியவர்கள் என்ற வகையில் மீபொருண்மை சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் என்பது போல தோன்றினாலும் ஒருவகையில் அவர்கள் மீபொருண்மையியலை வேறு ஒரு கோணத்தில் அணுகியவர்கள் என்றே கொள்ள வேண்டும்.

சசூரின் நவீன மொழியியல் கோட்பாடுகள் அமைப்பியலாக வளர்ந்த போது அது மீபொருண்மையியலை கடுமையாக நிராகரித்தது. தொடர்ந்து வந்த பின் நவீனத்துவ சிந்தனைகளும் மீபொருண்மையியலை ஒரு பெருங்கதையாடல் எத்தனம் என நிராகரிக்கிறது. ஆனால் வேறொரு புறம் பகுத்தறிவின் வன்முறையைப் பேசும் அது வேறு பல நுட்பமான மற்றும் சிக்கலான மீபொருண்மை தளங்களை உருவாக்கிய படியே முன்னேறுகிறது என்ற வகையில் நவீன மீபொருண்மையியலின் சமகால சவால்களையும் சாத்தியங்களையும் வாசகர்களின் கணிப்புக்கு விட்டு விட்டு தமிழ் நவீன மீபொருண்மை கவிதைகளைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது நவீன கவிதைப் பரப்பில் நரனின் இடம் எது என நாம் கணிக்க உதவக்கூடும்.

தமிழ் நவீன கவிதை இயக்கத்தில் மீபொருண்மைக் கூறுகள் கொண்ட கவிதைகள் அதன் துவக்க முதலே எழுதப்பட்டு வருகின்றன. தமிழின் முதல் புதுக்கவிதையாளரான பிச்சமூர்த்தி கவிதைகளிலேயே மீபொருண்மை கூறுகள் நிறைய உண்டு. தமிழில் இவ்வகைக் கவிதை எழுதுபவர்களை புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீப்பொருண்மையாளர்கள் மற்றும் ஆன்மீக தேட்டம் உள் ஒடுங்கிய நிலையில் எழுதும் மீபொருண்மையாளர்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன் போன்றவர்களை கொள்வோம் எனில் உள் ஒடுங்கிய ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என சி.மணி, நகுலன், ஆனந்த், தேவதச்சன், எம்.யுவன், குவளைக்கண்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். இந்தப் பட்டியல்களில் ஒருசில விடுபடல்களும் இருக்கக்கூடும். மேலும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிஞர்களை மீபொருண்மையியல் என்ற தர்க்க எல்லைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீபொருண்மையியல் கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சகன் எப்போதும் தன் தர்கத்தின் வழியாக கறாரான சில எல்லைகளை வகுத்துக்கொள்ளவே விரும்புகிறான். கவிஞனோ எந்தக் கறாரான எல்லைகளையும் கடந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான்.

இப்போது நாம் விவாதிக்க வேண்டியது இந்த இரண்டு பிரிவுகளுக்குமான வித்யாசம் என்ன என்பதையே. நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி நவீன காலத்திற்கு பின் கார்டீசிய ஆய்வின் அடிப்படையிலான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு மீபொருண்மையியல் செயல்படத் துவங்கிய போது மீபொருண்மையாளர்களிடம் இந்த இரண்டு வகையான போக்கு இயக்கம் பெறத்துவங்கியது. அதாவது இவர்களில் சிலர் மரபான இறையியல் அல்லது மெய்யியல் சிந்தனைகளை கைவிடாமலேயே நவீன அறிவியலின் சிந்தனைப் போக்குகளை உள்வாங்கியபடி அதை வளர்த்தெடுக்கத் தலைபட்டார்கள். பிரமிளின் e=mc2, மற்றும் தெற்கு வாசல் போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கவிதையான e=mc2, சக்தி என்ற கருத்தாக்கம் தொடர்பான மரபான சிந்தனைப் போக்கும் ஐன்ஸ்டைனின் சக்தி கோட்பாடும் சந்திக்க நேர்ந்த புள்ளியைப் பேசுகிறது எனில் காலம் மற்றும் வெளி குறித்த நவீன அறிவியலின் உரையாடல்களும் காலபைரவன் என்கிற மரபான தொன்மமும் சந்தித்தித்துக் கொள்ளும் புள்ளியில் இரண்டாவது கவிதை நிகழ்கிறது.

இதன் மறுபுறம் நவீன அறிவியல் கோட்பாடுகள் கொடுத்த பிரக்ஞை வழியாக நிகழச் சாத்தியமான மீபொருண்மைக் கவிதைகளை மட்டும் எழுதியவர்கள் என இரண்டாம் வகை மீபொருண்மையாளர்களை கொள்ளலாம். இதற்கு உதரணமாக எம்.யுவனின் வேறொரு காலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையும் ஆனந்தின் கவிதைகளையும் சொல்லலாம். காலம் மற்றும் வெளி தொடர்பான மீபொருண்மை உரையாடல்களை ஒரு மழலையின் வியப்புணர்வோடும் புரியாதவனின் திகைப்போடும் பேசுகின்றன இவ்விருவரின் இவ்வகைக் கவிதைகள்.

இவ்விரு வகை மீபொருண்மையாளர்களில் நரன் எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை நாம் பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்நூலில் இவ்விருவகைக்குமே சாத்தியமான கவிதைகள் நிறைந்திருக்கின்றன.


முதல் வகைக்கு ஒரு கவிதையை நோக்குவோம்:

பேரமைதி

பேரமைதி
நீரினடியில் ஓராயிரம் மீன்கள்
நீந்திக் கொண்டுதானிருக்கின்றன
காலை மாற்றி வைக்கும் கொக்கால்
குளம் முழுக்கச் சலனம்
வட்ட வட்டமாய்
விரிந்து...விரிந்து..
குறுகி...குறுகி..
நீரினடியில் அலகை நுழைத்து
ஓராயிரம் மீனில் ஒரு மீனைக் கவ்விப் பிடிக்கையில்
துள்ளும் மீன்
துள்ளி..துள்ளி
நீரின் மேல் தெரியும் அகன்ற வெளியை
சலனப்படுத்துகிறது
விரிந்த
சலனத்திற்கும்
குறுகி நீண்ட பேரமைதிக்குமிடையே
ஒரு

தா ம ரைத்


ண்
டு

புத்தனிடமும் ஒரு குளமிருந்தது
அதற்குள் ஓராயிரம் மீன்கள்
ஓராயிரம் தாமரைகள்
ஓராயிரம் கொக்குகள்

நீரற்ற நீரால்
தசையற்ற மீன்களால்
இதழ்களற்ற தாமரைகளால்
பறந்துவிட்ட கொக்குகளால்
நிரம்பியிருக்கிறது அக்குளம்
எப்போதும் வற்றாக் குளமது
அதில் சலனிக்காத நீர்

அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது

புத்தனின் முகத்தைப் பார்
எவ்வளவு சலனம்
எவ்வளாவு பேரமைதி
இரண்டும் ஒன்றெனப் போல்நரனின் மிகச் சிறந்த கவிதைகளில் இது ஒன்று. குளம் சலனமற்றதைப் போல் இருக்கிறது. ஆனால் ஆழத்தில் எண்ணற்ற சலனங்களால் ஆனது. மேற்புரம் ஒரு சலனம் நிகழ்கிறது. ஒரு கொக்கு அலகு நுழைத்து ஆழத்து சலனத்திலிருந்து ஒரு மீனைப் பிடித்து வெளியில் தலை உயர்த்தியதும் சலனமற்று இருந்த வெளி சலம்புகிறது. வெளி சலனத்தில் விரிய குளத்தின் மேற்புரம் அமைத்திக்கு குறுகி நீள்கிறது இரண்டிற்குமிடையே ஒரு தாமரைத் தண்டு. இதுவரை கவித்துமாக இருந்த கவிதை சட்டென சரிந்து தத்துவத்திற்குள் நுழைகிறது. கவிஞனின் தர்க்க மனம் விழித்துக் கொள்கிறது. கவிஞன் கவித்துவ பித்து நிலையிலிருந்து இறங்கி அடைந்த தரிசனத்தின் உணர்வை அறிவாக பேச முனைகிறான். புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் என துவங்கி சலனமும் பேரமைதியும் ஒன்றென்று சொல்லி முடிகிறது கவிதை.

இப்போது தெற்கு வாசல் என்ற பிரமிளின் கவிதையோடு இதனை நோக்குவோம். இரண்டுக்கும் கவித்துவ நிலையில் உள்ள ஒற்றுமை என்ன இரண்டுமே தத்துவார்த்த நிலையில் உள்ள கருத்தினை கவித்துவ போதத்தில் சொல்ல முயல்பவை. ஆனால் நரனின் கவிதையில் உள்ளதைப் போல பிரமிளின் கவிதையில் உணர்ச்சி சரிவு நிகழவில்லை. பிரமிளின் கவிதையில் தத்துவார்த்த போதம் கவித்துவ எழுச்சிக்கு ஒரு க்ரியா விசையாக இருந்து மொத்தக் கவிதையையும் உணர்வு பூர்வமாக செய்திருக்கிறது. நரனின் கவிதையில் கவித்துவ எழுச்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் சட்டென வடிந்து போத மனத்திற்கு வந்து விடுகிறது.


இனி நரனின் இன்னொரு கவிதையைப் பார்ப்போம்முதலை

உப்புநீர் முதலையொன்று துயில்கிறது

தலையை நீருக்குள்ளும்
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் தொடங்கி
கோடைகாலம்வரை நீண்டிருந்தது.

நீரில் பாதியும் மணலில் பாதியுமாய் கிடக்கும் முதலை ஒன்றைக் காட்சிப்படுத்தி வெண்மணலை கோடைகாலமாகவும் நீரைக் கார்காலமாகவும் உருவகித்துக் காட்டும் இக்கவிதை இடப்பொருண்மையை காலப்பொருண்மையாக பேசிக் காட்டுவதன் வழியாக காலவெளித் தொடர்மம் (Time and space Continioum) என்கிற கருத்து நிலையை வியப்புணர்வோடு சுட்டுகிறது.
மேற்கூறிய இரண்டு கவிதைகளும் இரண்டு வகையானவை. முதல் கவிதையில் உணர்ச்சி போதத்தில் சற்று சரிவிருந்தாலும் அதில் ஒரு ஆன்மீகத் தேட்டம் உள்ளது. மேலும் நீர் என்பது நினைவிலி மனதின் குறியீடு என நவீன உளவியல் சொல்கிறது என்ற புரிதலோடு வேறொரு வாசிப்பு செய்யும் போது இந்தக் கவிதையின் அர்த்த தளம் இன்னும் விரிகிறது.

இரண்டாவது கவிதையில் நவீன இயற்பியலின் எல்லைக்குள் மட்டுமே இயங்கச் சாத்தியமான கவித்துவம் செயல்படுகிறது. இப்படியாக நரன் இருவகை மீபொருண்மைக் கவிதைகளும் எழுதச் சாத்தியமானவராக இருக்கிறார்.

மேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நரனும் வெறும் மீபொருண்மைக் கவிதைகள் மட்டுமே எழுதபவர் அல்ல என்பதற்கு இந்தத் தொகுப்பிலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. “உங்கள் பெயரென்ன?” , “உலகை அணுகுதல்” போன்ற எளிய மொழி விளையாட்டுகளால் ஆன கவிதைகளையும் எழுதுபவராக நரன் இருக்கிறார்.


வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள நல்ல கவிதைகளில் ஒன்று. அவரது மீபொருண்மையியல் கவிதைகளைத் தவிர அவர் இதைப் போன்ற கவிதைகளின் வழியாகத்தான் மிகச்சிறந்த கவிதைகளை நோக்கிச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது.


நரன் கவிதைகளின் மையம் என்ன? அல்லது நரன் என்ன மாதிரியான கவிதைகளை எழுத தொடர்ந்து வசீகரிக்கப்படுகிறார் அல்லது என்ன மாதிரியான விஷயங்கள் நரனுக்கு கவிதை எழுதுவதற்கான மன உந்தத்தை தருகிறது என்று பார்ப்போம்.

நரன் கவிதைகள் மற்றும் கவிதை எழுதும் முறை போன்றவற்றை தீர்மானிப்பவையாக ஐந்து காரணிகள் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

1. காலம் மற்றும் வெளி தொடர்பான சிந்தனைகள் அதாவது காலப் பொருண்மையில் நிகழும் ஒரு விஷயத்தை இடப் பொருண்மையில் சொல்லிப் பார்ப்பது இடப்பொருண்மையில் நிகழும் விஷயத்தைக் காலப்பொருண்மையில் சொல்லிப்பார்ப்பது.

2. நிலக் காட்சிகள், பொருட்கள் மற்றும் அதன் தோற்றம் போன்றவை குறித்து கண நேரம் மனதில் நிகழும் ஒரு குழப்பம், ஒரு தோற்ற மயக்கம் போன்ற உணர்வுகள்

3. சொற்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டச் சாத்தியமான எளிய மொழி விளையாட்டுகள். உதாரணமாக இருள் எனும் கவிதை
4. எண்கள்,சொற்கள் போன்ற தர்க்க சாத்தியம் நிறைய உள்ள விஷயங்களை ஒன்றின் தர்க்க சாத்தியத்தை வேறொரு தர்க்க சாத்தியமாக மாற்றி விட்டும் கலைத்துப் போட்டும் நிகழ்த்தும் தர்க்க மாயங்கள் (Logico – Magic)

5. கவிதைக்கான மையப்படிமம் அல்லது கருத்தை ஒரு கவிதையாக விரித்து எழுதுதல்.
தமிழ் நவீன கவிதை வெளியில் நரனின் சிறப்பு இடம் என்ன என்று பார்க்கலாம். சமகால தமிழ் நவீன கவிதை என்பதன் மையவிசையாக எது உள்ளது அதனோடு நரனுக்கு உள்ள உறவென்ன என்று பார்த்தால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். சமகால நவீனக் கவிதையின் மைய விசையாக உள்ள எதனோடும் நரனின் கவிதைகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக நரனின் கவிதைகளில் அரசியல் நிலைபாடுகள் இல்லை. பெரும்பாலான நவீன கவிஞர்களின் கவிதைகளில் உள்ளதைப் போன்று இருத்தலின் சிக்கல்களால் ஆன அழுமூஞ்சித்தனம் இல்லை.

நடன ஒத்திகை என்ற கவிதையும் ஷீ வின் வார்த்தைகளை கா பேசினாள் என்ற கவிதையும் வழக்கமான நரன் பாணியிலான கவிதைகள்தான் என்ற போதும் அந்தக் கவிதைகள் இயங்குகிற வாழ்வியல் வெளி அதை வழக்கமான நரன் கவிதைகள் என்ற தளத்திலிருந்து வேறொரு அனுபவதளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நரனின் கவிதைகளில் எங்காவது கொஞ்சம் ஒரு விசும்பல் இருக்குமானால் அது இந்தக் கவிதைகளில் மட்டுமே.


மற்றபடி நம் சூழலில் உள்ள கொந்தளிப்பான வெக்கைக் கவிதைகளுக்கு நடுவே நரனின் கவிதைகள் மிகுந்த குளிர்ச்சித் தன்மை நிரம்பியவையாக உள்ளன. சுகுமாரன் பின் அட்டையில் சொல்லியிருப்பதைப் போல கபடமற்ற மழலை வியப்பையும் குளிர்ச்சியான புன்னகை ததும்பும் தியான மனநிலையையும் தமிழ் கவிதை வெளியின் மேல் பரப்பியபடி இருக்கின்றன நரனின் கவிதைகள். இதனாலேயே நரனை நான் நம் சமகாலச் சூழலின் புறநடைக் கவிஞன் என்று கூறுவேன். உண்மையில் இதுவே அவரது பலம் மற்றும் பலவீனம் இரண்டும்.