உப்பு நீர் முதலை - நரன்
உப்புநீர் முதலை - இந்த தொகுப்பின் தலைப்பில் தொனிக்கும் நுண்சுட்டல் குரலே நரன் கவிதைகளின் டெசிபல் அலகாய் இருக்கிறது. பொதுமையான விளிகளுடன் வாசகனுக்கான பிரதிவெளியை விரிக்கும் கவிதை மரபில் இருந்து விலகி கண்ணாடி வெட்டும் ஸ்க்ரைபர் சொல்லாடல்களால் தன் கவிதையை முன் வைக்கிறார்.
(இடைக் குறிப்பு -1 - விமர்சனம் என்பது தீர்ப்பு வாசித்தல் எனப்படுவதில் முற்றும் முரண்படும் வாக்கியங்களை நம்பும் அகவெளி, விமர்சகன் தன் தர்க்க மற்றும் உணர்வு நிலைக்கு அணுக்கமான பழகிய கண்ணோட்டத்தினை துறந்து பிரதியை அணுக வேண்டுமென்பதில் தீர்க்கமாய் இருக்கிறதாதலால் முன்/பின்வரும் சொற்கள் வாசகக் குறிப்புகளாகவும்,நெஞ்சோடு கிளத்தலாகவும் வாசிக்கப்படக் கடவது .)
தொகுப்பின் மஜ்ஜைகளில் ஜென் பிரகாரங்களின் வௌவால் வீச்சமும் குழந்தைகள் உலகின் கால எந்திரப் பயண முகில் துகள்களும்.Metrical Verse என்பதைக் கடந்து உள்ளிருக்கும் Philosophical acuity இதன் பிரத்தியேகம். வகைப்பாடுகளின் வழி இவை சிலேடை,யமகம்,மடக்கு மற்றும் சித்திரக்கவி எனக் கொள்கிறேன்.
கண்மாய் நடுவே
உலகின் முதல் நாளில் ஒரு நுனியும்
கடைசி நாளில் மறு நுனியும் கட்டி
சேலை
காய வைக்கும்
பெண்ணைக் கண்டேன்
என தேவதச்சன் எழுதிய ’காலத்திற்கு’ அணுக்கமாயும்
………
வெளி சிறுத்துக் குறுகும்போது காலமும் ஒடுங்கி
விடுகிறது.
உன் அடர் வழி நினைத்துக் கலங்கும்
தொலைவு தொலைந்து கொண்டிருக்கும் மஹா விருக்ஷம் அகண்ட வருஷம்
ஒரு சாண் இடுப்பில் அடங்கி விடும்
என்ற பிரம்மராஜனின் வரிகளுக்கு எதிர்நிலையிலும் இயங்க முற்படுகிறது.
கிடுக்கிகளற்று சகலத்தையும் தீண்டிப் பார்க்க விரும்பும் புசித்துப் பார்த்து விட விரும்பும் குழந்தையின் மார்பக ஞாபகம் உள்ள கண்களும் ரேகைகளும் மாளாது வைத்திருக்கும் மாங்கருவண்டும் தேரையுமாய் ஓவியனாயும் கவிஞனாயும் இருந்தியங்கும் மனவெளியின் வார்ப்புகள்.
காலத்தின் சார்பு நிலையில் இருந்து நீட்சிக்கு நகர்த்தும் உள்ளுணர்வின் (intuition) சொல் விளையாட்டுகள் வழி அஃறிணை உயர்திணை தீர்ந்த பொதுத்திணை வாழ்வின் இயங்கியபடி இருக்கும் கணங்களை மொழிக்கு கடத்தி இருக்கிறார் நரன்.பிரக்ஞை தொலையும் கணத்திற்கு விரும்பி நகரும் தருணவெளி வர்ணங்களால் ,எண்களால் ,கோடுகளால், மிருகங்களால், பறவைகளால்,கோணங்கள் மற்றும் பாகைகளால்
சுமத்தப் பெற்றிருக்கும் அடையாளங்கள் மீதான வினவுதலை வடிவங்கள் உடனான சார்பு / உறவிலி நிலையை க்யூப் விளையாட்டு சதுரத்துள் இருக்கும் சதுரங்கள் போல் மாற்றி மாற்றி அடுக்கிப் பார்க்கிற கவிதைகளில் பெயர்கள் ,க்ளிப்புகள் நீருமிழ்வுகள் பரீட்சித்தபடி உலகை அணுக முனைகின்றன
இன்மைக்கும் இருப்புக்குமான இடத்தை சப்தத்தால் பிணைத்தல் துவங்கி எதிர் விளிம்புகளை முடிச்சிட முயலும் காரணிகளில் மைய இழை என இருக்கிறது /இருந்தது /இருக்கக் கூடும் காலம், காலம் மேலும் காலம்
வரிக்குதிரைகள் ,கொக்குகள், முதலைகள்,சிறுவர்கள் ,சிறுமிவழி தன் பால்யத்திற்கு சென்று மீளும் பேரிளம்பெண் ,முயல்கள் & இருதலை சர்ப்பங்கள் என பாடு பொருட்களில் தண்டவாளத் துண்டுகளின் இணைகோட்டுத்தன்மையும் கோடை இடைவெளியும் குறுக்கு கட்டைகளின் பிணைப்பும் இருக்குமாறு கவனமாயிருக்கிறார்.தன் வாலுண்ணும் பாம்புகளின் சித்திரமும் தம் குறி சுவைக்கும் ஈருடல் யாளிகளும் பிம்பமாக்கும் கவிதைகள்.
கவிதைச் சொல்லி தேர்ந்திருக்கும் வர்ணங்கள் வெளிர் தன்மையுடன் ஒரு சீருடை பாவத்தை வாக்கியங்களில் அமர வைப்பனவாய் இருக்கின்றன. நன்மை X எதிர் நன்மை என்பதில் துவங்கி பைனரிகளை அடுக்குதல் மூலம் பிறிதொன்றாய் விரியும் கவிதைகளை எழுதி இருக்கும் நரன் தனதான உலகின் பார்வைக்கு நம்மை பழக்குகிறார்.மொத்தமாய் வாசித்து முடித்ததும் கட்டப்பட்ட கண்களை அவிழ்த்ததும் வரும் நிறக்குருட்டுத்தனம் வாய்க்கிறது.
இசைக்குறிப்புகளில் மௌனத்திற்கான கனம் போலவே சொற்களிடையே (Diction) இருக்கும் தசம இடைவெளிகளில் இராணுவக்கால்களின் பாகை மாறாத குறுங்கோணங்கள் .
(இடைக்குறிப்பு -2 Though it’s futile & lame quest as penning poetry is framing the momentum of madness…)
ஒரு பறவைப் பார்வையில் பிரார்த்தனை கூடத்தின் பெஞ்சுகளின் முன் மண்டியிட்டிருக்கும் செவிலியரின் பிம்பம் வந்து போகிறது.
ஒரு பறவைப் பார்வையில் பிரார்த்தனை கூடத்தின் பெஞ்சுகளின் முன் மண்டியிட்டிருக்கும் செவிலியரின் பிம்பம் வந்து போகிறது.
நுட்பத்தை பேசும் அதே நேரம் லேபிள் ஒட்டப்பட்ட மியூசிய கண்ணாடிக் கூண்டுகள் போன்ற உலர்தன்மையும் தோன்றக் கூடும் மீள்வாசிப்பில்.
தொடர்ச்சியான கவிதை செய்தலில் கைக்கொண்டிருக்கும் வடிவம் பின் வரும் எதிர்நிலை நிறங்கள் மற்றும் எண்கள் வழி அமையவிருக்கும் பின்னல் கண்ணிகளை (Looping Elements of text)அனுமானங்கள் மூலம் நிறுவிப் பார்க்க முயலும் வாசக மனத்திற்கு ஒரு மாற்று மொழிதல் அவசியமாய் இருக்கிறது என்பதை அவதானத்தில் கொள்ள வேண்டியவராகிறார் கவிதைச் சொல்லி
காலாவதியான பிரச்சாரத்தொனி அற்ற, வாதையின் நோய்மை படிந்த பிளாஸ்டிக் பதங்களால் எழுதப் பெறும் சாம்பல் வாக்கியங்களில் இருந்து துண்டிக்கப் பெற்ற, புரட்சிகர துணுக்குகளால் ஆன எரிந்த மோட்டாரின் தாமிர வாடை வீசும் மொழிதலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கவிதைகள் பழங்குகையின் இடுக்குவழி கசியும் கீற்றொளியில் அசையும் சிலந்தி வலை. ஆனால் பார் விளையாட்டுக்காரனின் அந்தர அலைவைப் பார்க்கும் அடிநெஞ்சில் சப்தமிடும் பெண்டுலம், கவிதை வாசிக்கும் ஆசிய மனதின் தேவையாய் இருக்கிறது.
கவிஞனுள் இருக்கும் ஓவியனின் கோடுகள் செதுக்கும் வாக்கியங்களின் நேர்மை வழி மாய யதார்த்தத்தை விழையும் ப்யூசன் மனம் பருவங்களை மீட்டெடுக்கவும் பின் சென்று நுகரவும் எத்தனப் படுகிறது. இருவேறு புலங்களின் பௌதீக உடலங்களை பொதுமைப் படுத்தும் வேதியல் சமன்பாட்டை நிறுவி விட்டு தன் பேனாவை எடுத்துக் கொள்கிறார் நரன். சட்டப் புத்தகத்தின் ஷரத்துகளை எழுதும் அதி கவனத்துடன் ஒரு ஏவுகணையின் குறையும் மைக்ரோவிநாடிகளால் இறுதி வரியை நோக்கி நகர்கிறோம் நாம்.
அனுமதிக்கப்பட்ட தொட்டி வெளிகளில் அந்தரங்கங்கள் ஏதுமற்ற மீன்களின் இனப் பெருக்கமென கண்காணிப்பின் ஆய்வுமேசையில் நெளிந்து கொண்டிருக்கின்றன குழந்தைமையின் சுவடுகள் மற்றும் தண்டனைகள்.
வாசிக்கப் பெறுகிற எந்த கலாச்சாரப் புலத்திலும் (In any given culture) சிற்சில பெயரியல் மாற்றங்களுடன்,. திகழ்ந்து கவன ஈர்ப்பை பெற்று விடக் கூடிய வகைமையில் பொருந்துகிற கவிதைகளாக இருப்பது புதிய திறப்புகளை நோக்கி நகர வாய்ப்புகளை வைத்திருக்கிறது கவிதைச் சொல்லிக்கு.
புனைவில் மெய்மைக்கு அணுக்கமாக நகரக் கூடிய ஒப்பீட்டு இருப்பு (Verisimilitude)வாசகனின் தர்க்க மனத்தின் வழியே கிளைக்கும் வெளியேற்றம்/விடுதலைக்கு இணக்கமான படிம வெளியை உருவாக்குவதில் நரன் எய்த வேண்டிய உயரங்கள் இன்னும் உண்டு.
புனைவில் மெய்மைக்கு அணுக்கமாக நகரக் கூடிய ஒப்பீட்டு இருப்பு (Verisimilitude)வாசகனின் தர்க்க மனத்தின் வழியே கிளைக்கும் வெளியேற்றம்/விடுதலைக்கு இணக்கமான படிம வெளியை உருவாக்குவதில் நரன் எய்த வேண்டிய உயரங்கள் இன்னும் உண்டு.
Onomatopoeia என்று செப்பலோசைக்கும் செயலுக்கும் தொடர்புடைய சொற்களை அழைப்பது போன்று வடிவத்திற்கும் வினைக்குமான பிணைப்பை (Hyperbole) நுட்பமான வகைப்பாட்டில் மொழிப்படுத்தியிருக்கிறார் உலகத்தை அணுகுதல் துவங்கி தொடரும் கவிதைகளில்…
பதினாறாம் நூற்றாண்டின் ஜார்ஜ் ஹெர்பர்ட்-ன் ’ஈஸ்டர் சிறகுகள்’ என்ற வாசிக்க/காண வாய்த்த முதல் பேட்டர்ன் கவிதை. இரண்டு பறக்கும் பறவைகளின் சித்திரத்தை காட்சிப்படுத்தும் இக்கவிதை முறை வழி நரனின் படிமங்கள் உருவாக்குவது குழந்தைகளின் உலகம்.
Practical lexicography என்னும் அகராதி அடுக்குமுறையின் சாயலில் நேர்- நேர் பொருள் கொள்ளும் தசாப்தத்திற்கு முன் துவங்கிய சொல்முறையின் பரவலால் பாதிப்புறாமல் பிரதியின் ஆன்மா வாசகனின் ரேகைகளுடன் உருப்பெறும் ஈரப் பதுமையாக பிறிதொன்றாகும் இடத்தில் புனை பிரதிகள் நரனல்லாத தனித்ததொரு பிம்பத்தை உருவாக்க முயல்கின்றன. கனிகளை காட்டிக் கொடுக்கும் பறவையின் சப்தம், கவித்துவம் கோரும் கவனயீர்ப்பு.
நீரின் மேல் இலையைப் போல் நகரும் நீர்பறவையின் கால்கள் கவிதையில் சொல் மற்றும் வாசகப் புரிதல்.ஒரு பெருவெடிப்பு கணத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை எளிய சூத்திரத்துள் எழுதிப் பார்க்கும் கவிதைகள் முன்முடிபுகள் நிரப்பப் பெற்ற கணிதங்கள் கடந்து திறக்கும் ஆகாயத்தின் கோளடுக்குகள் மற்றும் பால் வெளித் தூசுகளுடன்.அணுக இலகுவான மொழி வழி கவிதைச் சொல்லி உயிர்ப்பிக்க விரும்பிய பிரபஞ்சத்தின் சாத்தியம் வாசகனின் தோலுரியும் கரத்தின் தொங்கல்களில்.
புரிதல் குறித்த அவதானச் சிக்கல் (Decoding the text) புழக்கத்தினால்
மட்டும் கடக்கக் கூடிய சொல்லமைவுகள் பெரிதும் அற்ற தொகுப்பாய் இருக்கிறது.பிரதியின் குவிமையம் ஏழு கடல் /மலை கடந்து ஒளித்து வைக்கப் பெறுவதாய் இல்லை திசைகாட்டியும் வழித்தட வரைபடமும் வழங்கி பயண ருசியை வாசகனுக்கு வைக்கிறார் நரன்.
பழகிய மன அமைப்புகளுக்கான துயரத்தீனி அல்லது உணர்வு ரீதியான ஒத்தடங்கள் இன்றி சீசா பலகையின் மேல் நிலை நொடியில் ஒரு புகைப்பட பிளாஷ் கணத்தை தாளுக்கு கடத்தும் பிக்செல் ஓவியக்காரரின் தொகுப்பென இருக்கிறது.
சூதாட்ட சோழிகளின் கடல் மூலங்களில் நகர்ந்த தூரங்களை வெளியுருண்டு கட்டங்களுக்குள் நகர்த்துகின்ற வித்தையுள்ள சொற்களை கண்டறிவது கவிஞனின் ஆகச் சிறந்த சுவாசத்தின் உஷ்ணம்.பிறகான கவிதைகளில் நிகழ விரும்பும் கோளியக்கங்களுக்கான வேர் தூவிகள் இந்தக் கவிதைகளில் இருந்தே ஆக வேண்டுமென்பதும் இல்லை.
தொப்பூல்வழி X புலன் ஊடக வழி வளரும் ஈருடல் தன்மை மற்றும் எந்திரங்களுக்கான கடவுச்சொல் சேமிப்பறையாய் மாறி இயங்கும் நியுரான் உலகம்.ஒரே பற்பசையை, மருந்துகளை ,நோய்களை, ஆணுறைகளை கொண்ட குளோனிங் மனித சமூகத்தின் அறிபிம்பங்களாய் சீருடைத்தன்மையுள்ள கவிதைகள் உப்பு நீர் முதலையின் செதிலெங்கும். ரிச்சர்ட் டட்டில் – ன் ஓவியங்களை அணுகும் அதிகவனத்துடன் தொகுப்பின் ஓவியங்களையும் உள்வாங்கப் பணிக்கிறது நேர்த்தி