Showing posts with label உயிர் எழுத்து நவம்பர்' 08 இதழில் வெளியான கவிதைகள். Show all posts
Showing posts with label உயிர் எழுத்து நவம்பர்' 08 இதழில் வெளியான கவிதைகள். Show all posts

Tuesday, September 7, 2010

கவிதை


முதலை

------------

உப்புநீர் முதலையொன்று துயில்கிறது.

தலையை நீருக்குள்ளும் ,
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் துவங்கி
கோடைகாலம் வரை நீண்டிருந்தது .

கொக்குகள்
------------
வெந்நிற கொக்குகள்
பறந்தபடியிருகின்றன .
உயர ...உயர
மிகமிக உயர
இப்போது
வெந்நிற மேகங்கள்
பறந்தபடியிருகின்றன .
இறக்கைகளை அசைத்தபடி
தத்தம் கால்களை மடக்கியபடி.


தார்சாலைகள் ,வெந்நிற கோடுகள்
------------------------------------------
வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்சாலைகள்
அதன் நடுவே
வலப்புறத்தையும் ,
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெந்நிறக் கோடுகள்
எப்போதும் அதன் மேலேறி நடந்து செல்கின்றன .
சில வரிக்குதிரைகள்
வரிகுதிரையின் மேலேறிச் செல்கின்றன . சில
தார்சாலைகள் ,சில வெந்நிற கோடுகள்


நடன ஒத்திகை

--------------------
37,38 யென
கடந்து கொண்டிருந்தது வயது .
முந்தைய நாள்
பள்ளி ஆண்டுவிழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .
தன் மகளை போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .

கற்களின் சாயல்

---------------------
எல்லா கற்களிலும்
ஏதோ உருவமொன்றின்
சாயல் தெரிகிறது .
இதுவரை அச்சாயல்கொண்ட
உருவங்களுக்கும் ,உங்களுக்குமான
சந்திப்புகள் நிகழ்ந்திருக்கவில்லை
இதுவரை
நீங்கள் சந்தித்த உருவங்களின்
சாயல் கொண்ட கற்கள்
வேறொருவனின் கைகளிலிருகின்றன .
இப்போது அவனுக்கான கற்கள் உங்களிடம்
இருப்பது போலவே .

பதிவேடு
-----------
பறவையொன்று
விட்டுச் சென்ற
சிறகொன்றையெடுத்துவந்து
உன் மைக்கூட்டில்
சொருகியிருக்கிறாய்
எப்போதேனும் சிறகுமுனையில்
மைதொட்டு உன் வாழ்க்கைக் குறிப்பை
எழுதி வைகிறாய்
உன் பதிவேடு காலியாயிருக்கிறது .
உன் குறிப்புகள் எப்போதும்
அந்தரத்தில் மிதந்தபடியிருக்கின்றன

உப்பளம்
------------
உப்பளத்தில் அமர்ந்து
அழுது கொண்டிருந்தாள்.
ஒருவன் அவள் அழுகையைப்
பிரித்துப்பிரித்து
பாத்திக்கட்டிக் கொண்டிருந்தான்.
சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தன
அவள் அழுகையை
வெவ்வேறு ஊர்களுக்கு
ஏற்றிச் செல்லவிருக்கும்
லாரிகள் ....
லாரிகள் ....

பிரசவ வார்டு
---------------------
மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று
அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...
பிள்ளைத்தாச்சிக்கென .