Friday, December 31, 2010

''உப்புநீர் முதலை '

கவிஞர் .இசைநண்பர்களே , அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . என் கவிதை
தொகுப்பு ''உப்புநீர் முதலை '' காலச்சுவடு பதிப்பகத்தில் வர இருக்கிறது
.வரும் புத்தக கண்காட்சியில் ஜனவரி 6 ,2011மாலை 6மணி காலச்சுவடு அரங்கில்
(f43)
நூலை எனது ஆருயிர் நண்பன் கவிஞர் .இசை வெளிடுகிறார் .

அந்த கணத்தில்
எனது நண்பர்கள் அனைவரும் என அருகில் இருக்க வேண்டுமென்பது எனது
விருப்பமும் ஆசையும்.நிச்சயமாக தங்களின் வரவை அன்புடன் எதிர்பார்க்கிறேன்
அன்பின்
நரன்

Thursday, November 18, 2010

ஷீ ...ன் வார்த்தைகளை கா.... பேசினாள்காலை வணக்கம் ஐயா,
எங்கள் வங்கியிலிருந்து தங்களுக்கு
கடன் அட்டை வழங்குகிறோம் .
நீங்கள் விருப்பமாயிருக்கிறீர்களா ?
இனிய மென்மையான குரலில் வினவினாள். காவ்யா
இரண்டு மாதமாக
தங்களின் கடனட்டை தொகை செலுத்தப்படவில்லை
தொகையை வட்டியோடும், அபராதத்தோடும்
உடனே செலுத்துங்கள் .
காட்டமான குரலில் பேசினாள்.ஷீலா ப்ரியதர்ஷன்
ஷீ ...விடுமுறையில் போயிருந்தாள்
கா ...வை அவளிடத்தில் அமர வைத்தார்கள் .
ஷீ ...யின் வார்த்தைகளை கா .... பேசினாள்.
இனிய மென்மையான குரலில்
பொம்மை துப்பாக்கியால்
சுட்டுடுவன் ....சுட்டு ....டு...வேனென
தந்தையை மிரட்டும் 4வயது பெண் குழந்தையின்
குரல் போலிருந்தது

உங்கள் பெயரென்ன ?


உங்கள் பெயரென்ன ?
------------------------------


றுகாற்,ம்கங்சி
எழுத்துக்களை மாற்றிப்போட்டு
விளையாடும் விளையாட்டை வகுப்பறையில்
விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
சிங்கத்தின் பின்பக்கத்தில் தலையும்
முன்பக்கத்தில் வாலுமிருந்தது .
வேறொருவன் சிங்கமென்ற
வார்த்தையை நேர்படுத்தி
அதன் உடலை சரிசெய்தான் .

அடுத்த அறையில்
தலையை கீழே ஊன்றி
காலை வான்நோக்கி வைத்தபடி
சிரசாசனம் செய்து கொண்டிருந்தாள்.
3வது படிக்கும் சிறுமி .

ரா
த்
வி


வகுப்பறையின் வெளியே
வீட்டுப்பாடம் செய்யாமல் எழாவதுப்படிக்கும்
செ
ந்
தி
ல்
ர்மாகு
முழந்தாலிட்டு அமர்ந்திருந்தான் .

உணவு இடைவேளையில்
தேநீர் கடையில்
நான் இடதுகாலின் மேல்
வலது காலை போட்டு அமர்ந்திருந்தேன் .
எல்லோரும் ஓடினார்கள்.
ரயிலில் அடிபட்டு சிதறி கிடந்தவளின்
பெயர் .

கி மு

ண ர்

சொ
அவளின் கடைவாயில் ஒரு "ஈ".
நான் அருகில் வந்ததும்
பறக்க துவங்க்கி விட்டது .
நேராய்,
தலை கீழாய்,
கிடை மட்டமாய் ,
இடவலமாய் .....எப்படியெல்லாமோ
எப்படி பறந்தாலும் அந்த
"ஈ" - யின் பெயர்
அப்படியேயிருக்கிறது.
(குறிப்பு:-படுத்து கால்களை நீட்டி சாவாசன நிலையில் எனது பெயர் .நரன் )

உலகை அணுகுதல்
----------------------------15வயதில் மதிய நேர
அறிவியல் வகுப்பிற்கு
ஆசிரியர் கொண்டு வந்தார்.
"U"வடிவ சோதனை குழாய் என்ற வார்த்தையை
புதியதாய் இருந்தது. அந்த வார்த்தை

அன்றிலிருந்து எழுத்துக்களை கொண்டு
உலகை அணுகத் துவங்கினன் .

கிராமத்தில் தாத்தா இறந்து விட்டார் .
அவரை குளிப்பாட்டி "h"வடிவ நாற்காலியில்
அமர வைத்திருந்தார்கள் .
அருகில் அவரின் தலைகீழ் "J "வடிவ கைத்தடியுமிருந்தது
நேரமாகி விட்டது .
தாத்தாவை எடுத்துப் போய் "H"வடிவ பாடையில்
கிடத்தினார்கள் .

அம்மா தலை விரி கோலமாயிருந்தாள் .
நீண்ட தலை முடியை அள்ளி "O"வாக்கி,
அதன் நுனி முடியை எடுத்து வெளியே விட்டு
"Q"வாக்கினாள்.


முடிவெட்ட கிளம்பினேன்.
வீடுகளின் நடுவேயிருக்கும் சந்தில்
ஒரு பெண்
சேலையை முழங்கால் வரை தூக்கி பிடித்து
''A"போல் நின்றபடி சிறு நீர் கழித்துக்கொண்டிருந்தாள் .
வழியில் சிறுவர்களிருவர் "V"வடிவ கவணில்
ஓனானை குறிபார்த்து க்கொண்டிருந்தார்கள் .

கடையில் முடி திருத்துநர்
"E''வடிவ சீப்பால்
தலை வாரி விட்டபடியே
தலை கீழ் ''Y''வடிவ கத்திரியால்
X,Y
X,Y யென மாற்றி மாற்றி வெட்டி கொண்டிருந்தார் .
அங்கே "ப" வடிவ மீன் தொட்டியொன்றில்
தங்க நிற
o
O
மீன்கள் O

வாக முட்டையிட்டு கொண்டிருந்தன.

Tuesday, September 7, 2010

கவிதை


முதலை

------------

உப்புநீர் முதலையொன்று துயில்கிறது.

தலையை நீருக்குள்ளும் ,
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் துவங்கி
கோடைகாலம் வரை நீண்டிருந்தது .

கொக்குகள்
------------
வெந்நிற கொக்குகள்
பறந்தபடியிருகின்றன .
உயர ...உயர
மிகமிக உயர
இப்போது
வெந்நிற மேகங்கள்
பறந்தபடியிருகின்றன .
இறக்கைகளை அசைத்தபடி
தத்தம் கால்களை மடக்கியபடி.


தார்சாலைகள் ,வெந்நிற கோடுகள்
------------------------------------------
வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்சாலைகள்
அதன் நடுவே
வலப்புறத்தையும் ,
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெந்நிறக் கோடுகள்
எப்போதும் அதன் மேலேறி நடந்து செல்கின்றன .
சில வரிக்குதிரைகள்
வரிகுதிரையின் மேலேறிச் செல்கின்றன . சில
தார்சாலைகள் ,சில வெந்நிற கோடுகள்


நடன ஒத்திகை

--------------------
37,38 யென
கடந்து கொண்டிருந்தது வயது .
முந்தைய நாள்
பள்ளி ஆண்டுவிழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .
தன் மகளை போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .

கற்களின் சாயல்

---------------------
எல்லா கற்களிலும்
ஏதோ உருவமொன்றின்
சாயல் தெரிகிறது .
இதுவரை அச்சாயல்கொண்ட
உருவங்களுக்கும் ,உங்களுக்குமான
சந்திப்புகள் நிகழ்ந்திருக்கவில்லை
இதுவரை
நீங்கள் சந்தித்த உருவங்களின்
சாயல் கொண்ட கற்கள்
வேறொருவனின் கைகளிலிருகின்றன .
இப்போது அவனுக்கான கற்கள் உங்களிடம்
இருப்பது போலவே .

பதிவேடு
-----------
பறவையொன்று
விட்டுச் சென்ற
சிறகொன்றையெடுத்துவந்து
உன் மைக்கூட்டில்
சொருகியிருக்கிறாய்
எப்போதேனும் சிறகுமுனையில்
மைதொட்டு உன் வாழ்க்கைக் குறிப்பை
எழுதி வைகிறாய்
உன் பதிவேடு காலியாயிருக்கிறது .
உன் குறிப்புகள் எப்போதும்
அந்தரத்தில் மிதந்தபடியிருக்கின்றன

உப்பளம்
------------
உப்பளத்தில் அமர்ந்து
அழுது கொண்டிருந்தாள்.
ஒருவன் அவள் அழுகையைப்
பிரித்துப்பிரித்து
பாத்திக்கட்டிக் கொண்டிருந்தான்.
சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தன
அவள் அழுகையை
வெவ்வேறு ஊர்களுக்கு
ஏற்றிச் செல்லவிருக்கும்
லாரிகள் ....
லாரிகள் ....

பிரசவ வார்டு
---------------------
மருத்துவமனை பிரசவ வார்டில்
பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்
ஈனும் வலியில்
"அம்...மா" வென அலறியது
பெண் எறும்பொன்று
அதே வார்டில்
பிள்ளைப் பெற்றிருந்தவளை
பார்க்க வந்திருந்தவர்கள்
எடுத்து வந்திருந்த பாட்டிலில்
ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன
சில எறும்புகள்
பிள்ளைத்தாச்சிக்கென ...
பிள்ளைத்தாச்சிக்கென .

Wednesday, August 18, 2010

கவிதை


மண்புழு
---------------

மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன்
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு உடலாய் ,
திசைகொரு உயிராய்....

பிரிந்து ,பிறந்து

பிறந்து,பிரிந்து


ஆனால் எல்லாம் சம வயதில் .


Monday, August 9, 2010

கவிதைகள்


திரு .பெலிக்ஸ்

------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான 63வயது திரு .பெலிக்ஸிடம்
177ஆண்டுகள் பழமையான மது புட்டியொன்று கிடைத்தது .
அவரின் 23ம் வயதில்
பொலிவிய நாட்டு கடற்பயண நண்பனொருவன் அதை பரிசளித்தான் .
இதுவரைஅம்மதுவை 3முறை மட்டுமே அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில்
தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை
அப்போது அம்மது இனிப்பு சுவையுடையதாயிருந்தது

37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....
அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .

தன் 58வயதில் சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்
அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது .

கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த அம்மதுவை
தன்80வது பிறந்த நாளில் அருந்த திட்டமிட்டிருந்தார் .
அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை
தான் அறிவேனென நம்பிகொண்டிருந்தார் .
ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .
மிச்சம் இருந்த மதுவைகுவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .
17ஆண்டுகள் மீதமிருந்தது . .

வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
------------------------------------------

வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்
1853 சூன் 7ம் திகதி
137 ம் பக்கம்.
கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய
வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .
7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில் அது வீழ்த்தப்பட்டது .
கொல்கத்தா அருங்காட்சியகத்தில்
இப்பவும் வைஸ்ராயின் டைரி இருக்கிறது
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட கண்ணாடி பேழைக்குள்
வரியேரிய அப்புலியின் உடல்
தைலம் பூசி பாதுகாக்கப்பட்டு வருகிறது .
டைரி குறிப்பின் சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு
இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன் புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும்
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.
பலநூறு மைல்கள் தாண்டி
கானகத்திற்குள் அதன் எலும்புகளை வைத்து
பழங்குடியொருவன் தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .

வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
----------------------------------------------------------
வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்

1853 சூன் 7ம் திகதி 137 ம் பக்கம்.

கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய

வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .

7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில் அது வீழ்த்தப்பட்டது .

கொல்கத்தா அருங்காட்சியகத்தில்

இப்பவும் வைஸ்ராயின் டைரி இருக்கிறது

இரண்டு அறைகள் தாண்டி

கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட கண்ணாடி பேழைக்குள்

வரியேரிய அப்புலியின் உடல்

தைலம் பூசி பாதுகாக்கப்பட்டு வருகிறது .

டைரி குறிப்பின் சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு

இரண்டு வரிக்கு முன்னால்

உறுமலுடன் புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .

வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்

முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும்

பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.

பலநூறு மைல்கள் தாண்டி

கானகத்திற்குள் அதன் எலும்புகளை வைத்து

பழங்குடியொருவன் தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.

எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .

திரு .பெலிக்ஸ்

------------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான 63வயது திரு .பெலிக்ஸிடம்

177ஆண்டுகள் பழமையான மது புட்டியொன்று கிடைத்தது .

அவரின் 23ம் வயதில்

பொலிவிய நாட்டு கடற்பயண நண்பனொருவன்

அதை பரிசளித்தான் .]


இதுவரைஅம்மதுவை

3முறை மட்டுமே அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில் தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை

அப்போது அம்மது இனிப்பு சுவையுடையதாயிருந்தது


37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....

அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .


தன் 58வயதில்

சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்

அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது


கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த அம்மதுவை

தன்80வது பிறந்த நாளில் அருந்த திட்டமிட்டிருந்தார் .

அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை தான் அறிவேனென நம்பிகொண்டிருந்தார் .


ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .

மிச்சம் இருந்த மதுவைகுவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .

17ஆண்டுகள் மீதமிருந்தது . .


Wednesday, January 6, 2010

அரூப அன்னம்

அரூப அன்னம்
----------------------------
நீரையும் ,பாலையும்
தனித்தனியே பிரித்துணரும்
அரூப அன்னமொன்று
காலையிலும் ,மாலையிலும்
பால்காரனின்
பால்வாளி தொங்க விடும்
சைக்கிள் ஹேண்டில்பாரில்
அமர்ந்து திரிகிறது அவனோடு .

ப. எண்.30 பு. எண் 32. வீட்டில்
நோயாளி கணவனுக்காய்
நெளிந்த அலுமினியப் பாத்திரத்தில்
கடன் சொல்லி பால் வாங்குகிறாள்
முதிய பெண்ணொருத்தி .

அடுத்த வீட்டில்
புது ரூபாய் தாளினை நீட்டி
புது சில்வர் பாத்திரத்தில்
சிரித்தபடி பால் வாங்குகிறாள்
புது பெண்ணொருத்தி .
கெட்டியான பூரிப்பு
நுரைத்து நிற்கிறது .
அவள் பாத்திரத்தில்

அலுமினிய பாத்திரத்திலிருந்து
பாலையும்
புது சில்வர் பாத்திரத்திலிருந்து
நீரையும்
பிரித்துணர முடியாமல் திணறுகிறது அன்னம் .

முன்பாக பால்காரன் அன்னமாகி
அலுமினிய பாத்திரங்களுக்கும்
புது சில்வர் பாத்திரங்களுக்கும்
வெவ்வேறு வாளிகளில்
பாலை பிரித்து நிரப்புகிறான் தினமும் .

இப்போது சீட்டிலும்,
ஹேண்டில்பாரிலும்
இரண்டு அன்னப்பறவைகள்
சைக்கிளில்
வெவ்வேறு வீடுகளை தேடி அலைகின்றன
வெவ்வேறு வீதிகளில் .