Wednesday, January 6, 2010

அரூப அன்னம்

அரூப அன்னம்
----------------------------
நீரையும் ,பாலையும்
தனித்தனியே பிரித்துணரும்
அரூப அன்னமொன்று
காலையிலும் ,மாலையிலும்
பால்காரனின்
பால்வாளி தொங்க விடும்
சைக்கிள் ஹேண்டில்பாரில்
அமர்ந்து திரிகிறது அவனோடு .

ப. எண்.30 பு. எண் 32. வீட்டில்
நோயாளி கணவனுக்காய்
நெளிந்த அலுமினியப் பாத்திரத்தில்
கடன் சொல்லி பால் வாங்குகிறாள்
முதிய பெண்ணொருத்தி .

அடுத்த வீட்டில்
புது ரூபாய் தாளினை நீட்டி
புது சில்வர் பாத்திரத்தில்
சிரித்தபடி பால் வாங்குகிறாள்
புது பெண்ணொருத்தி .
கெட்டியான பூரிப்பு
நுரைத்து நிற்கிறது .
அவள் பாத்திரத்தில்

அலுமினிய பாத்திரத்திலிருந்து
பாலையும்
புது சில்வர் பாத்திரத்திலிருந்து
நீரையும்
பிரித்துணர முடியாமல் திணறுகிறது அன்னம் .

முன்பாக பால்காரன் அன்னமாகி
அலுமினிய பாத்திரங்களுக்கும்
புது சில்வர் பாத்திரங்களுக்கும்
வெவ்வேறு வாளிகளில்
பாலை பிரித்து நிரப்புகிறான் தினமும் .

இப்போது சீட்டிலும்,
ஹேண்டில்பாரிலும்
இரண்டு அன்னப்பறவைகள்
சைக்கிளில்
வெவ்வேறு வீடுகளை தேடி அலைகின்றன
வெவ்வேறு வீதிகளில் .