Monday, May 25, 2009

உயிரோசை இதழ் 39 ல் வெளியான எனது கவிதை

விண்ணப்பம்
----------------

மழையைப் பற்றியும்,

வெயிலைப் பற்றியும்

ஆய்வு மேற்கொள்பவன்

மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .

மழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை

ஒரு மழை நாளில் நனைந்தபடியே

மேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .

அதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .

மேலதிகாரி

சில நாட்களுக்குப் பின்னர்

அக்கோப்பை எடுத்துப் பார்க்கையில்

மழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்

உலர்ந்து

வெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .

வெயில் பற்றிய அவனது ஆய்வுக் குறிப்புகளோடு

அலுவலகத்திற்குள்

அவன் நுழையத் துவங்கியதும்

வெயில் காணாமல் போய்

குறிப்புகளின் மேல்

நிழல் படியத் துவங்கி விடுகிறது .

பைத்தியத்தைப் போல கத்துகிறான் .

வெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று

ஒரு காகிதத்தை எடுத்து

மழை பற்றிய

ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்க

நீர்த்தொட்டியொன்றையும் ,

வெயில் பற்றிய

ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்க

மேல் கூரையற்ற

சிறிய அறையொன்றையும்

கட்டித்தருமாறும் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தான் .

Saturday, May 23, 2009

காலச்சுவடு இதழ்108 ல் வெளியான எனது கவிதை

நான்கு பேர்
-----------------
வேறொருவரைப் பார்க்கப் போயிருந்தேன்
வருவாரெனச் சொல்லி
நான்குபுறமும் கண்ணாடியால்
சூழ்ந்தஅறையொன்றில்
அமரவைத்தார்கள்.
உள்ளே என்னைப் போலவே
எல்லா திசைகளிலும்
ஒருவர் அமர்ந்திருந்தார்.
நடுவே அமர்ந்திருந்தஎன்னைப் பார்க்க
அவர் வந்தார் அறைக்கு
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேர் அவரோடு நுழைந்தார்கள் அறைக்குள்
நான் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்
என்னை போலவேயிருக்கும் நான்கு பேர்
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேரோடுபேசிக்கொண்டிருந்தார்கள்.

Friday, May 22, 2009

உயிரோசை இதழ் 8 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்




1.அவன் சிலநேரம்


காற்றில்


அப்படியும் இப்படியுமாய்


வாளை வீசும்போது


அம்மரத்திலிருந்து


ஓரிரு இலைகள் உதிர்கின்றன.


*****
2.


எதிர்பார்த்தல் எதுவுமின்றி


நூறாண்டுக்குப்


பின்வருபவர்களுக்கும்


உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் .


நூறாண்டுக்கும் முன்


யாரோ புதைத்து வைத்த


ஒயின் பீப்பாயை


மண்ணிலிருந்து


தோண்டி எடுக்கும் போது .


*****
3.


பச்சைநிற வயற்பரப்பிலிருந்து


பச்சைநிறத் துண்டு வயற்பரப்புகள்


ஆகாசம் நோக்கிப் பறக்கின்றன


வசந்த காலத்தின்


ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .


*****
4.


கொஞ்சம் அரிசியையும்


கட்டுச் சுள்ளியையும்


கொடுத்து உதவினான் .


திரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்


அவனுக்கு .


அது மட்டும் தான்


அது மட்டும் தான்


அளிக்க முடிந்தது என்னால்


அப்போதைக்கு .


*****
5.


ஆறு மாதத்திற்குப் பின்


இங்கே வந்திருக்கிறேன்


தியானத்திற்காய் .....


உதிர்ந்த இலைகள்


பொலிவிழந்த மரங்கள்


ஹோ .....


என் தியானம் எப்படிக் கழியும்


அமைதியுடன் .


*****
6.


வனாந்திரத்தில்


உதிர்ந்த பூக்களை மிதித்தபடி


மரத்திலிருக்கும் பூக்களை


ரசித்துக் கொண்டிருக்காதே .


அதனதன்


இயல்பிலிருக்கின்றன பூக்கள் .


*****
7.


வனத்தில் அமர்ந்து


சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .


மரங்கள்


அவற்றை தன் அருகிலிருக்கும்


துணைமரங்களுக்கு கைமாற்றி


விட்டுக் கொண்டிருந்தன .


*****
8.


தொடர்ந்து


இயற்கையை அவதானித்துக்


கொண்டிருந்தேன்....


.........தொடர்ந்து..


வயதாகி விட்டது .


என் மகனிடம்


கையளித்துவிட்டுசெல்கிறேன் .


மரங்களும்


தன் பங்கிற்கு


கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .


*****
9.


என்னோடு


இந்த தியானவிரிப்பின் மூலையில்


ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .


கண்களை மூடிதியானிக்கத் துவங்கினேன்


தியானம் இப்போது மூலையிலிருந்து


எறும்புகள் சாரைசாரையாய்


நகர்ந்து கொண்டிருந்தன


தியானத்தின் மேல் .


*****
10.


தியானத்திற்குப்பின்


மூன்று துறவிகளும்


ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .


குளித்து முடித்து


வெவ்வேறு கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .


முதல் துறவி சொன்னார் .


நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .


இரண்டாம் துறவி ........


நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.


மூன்றாம் ...........


நான் குளித்த கிணற்றில்


27தவளைகளும் ,


நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .


பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று


தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.

உயிரோசை இதழ் 20 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதை -நரன்


ஜென் வரிக்குதிரை

--------------------------

1.

இரவையும் ,பகலையும் தன் உடலின் வழியே

ஒரே நேரத்தில் கடந்து செல்கிறது வரிக்குதிரை.

2.

பியானோ கட்டைகளின் மேல் ஒரு வரிக்குதிரை

வரிக்குதிரையின் மேல் ஒரு பியானோக்கட்டை

3.

நீண்ட புற்களிடை மேயும் வரிக்குதிரை

கருப்பு ,வெள்ளை மற்றும் பச்சை .

4 .

வரிக்குதிரையின் மேல் அரூப மனிதர்களிருவர்

செஸ் ஆடி கொண்டிருகிறார்கள் .

உயிர்மை இதழில் வெளியான எனது 2 கவிதைகள்




ஆய்வறிக்கை


---------------------
வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்


தன் ஆய்வின் முடிவை சமர்பித்தான்


1137 வண்ணத்துப்பூச்சியின் வகைகளையும்


அதன் வாழ்வியல் கூறுகளையும்


பகுப்பாய்வு செய்து


அவற்றின் புகைப்படங்களையும்


அதில் இணைத்திருந்தான்.


பெயரும், புகைப்படமும் இல்லாத


1138வது வண்ணத்துப்பூச்சியொன்றையும்


அவனுக்குத் தெரியும்.


அதை அவன் தன் 16 வயதில் பார்த்தான்


அதே வண்ணத்துப்பூச்சியை சமீராவும் பார்த்தாள்.


அப்போது அவளுக்கு வயது 14.


குட்டிக் குழந்தை


----------------------
4வயது குட்டிக் குழந்தை


மிகக்குட்டியான உடையை உடுத்துகிறது.


தன் குட்டியான பாதங்களால்


குட்டியான அடிகளை எடுத்து வைக்கிறது


இப்பிரபஞ்சத்தின் மீது.


33வயது தந்தையின்


மிகப்பெரிய பூட்சுகளை அணிந்தபடி


பெரிய பெரிய அடிகளை


எடுத்து வைக்கமுயல்கிறது.


தந்தையின் பெரிய கால்சராயை


அணிந்து கொள்கிறது.


இடுப்பில் நிற்காத அக்கால் சராய்


அவிழ்ந்து அவிழ்ந்து விழுகிறது.


33 வயதிலிருந்து


4வயதிற்கு.

உயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)




முதலை



----------



உப்புநீர் முதலையொன்று துயில்கிறது .



தலையை நீருக்குள்ளும் ,



உடலை வெண்மணலிலும்



கிடத்தியபடி



அப்போது அதனுடல்



கார்காலத்தில் துவங்கி



கோடைகாலம் வரை நீண்டிருந்தது .





கொக்குகள்



------------



வெந்நிற கொக்குகள்



பறந்தபடியிருகின்றன .



உயர ...உயர



மிகமிக உயர



இப்போது



வெந்நிற மேகங்கள்



பறந்தபடியிருகின்றன .



இறக்கைகளை அசைத்தபடி



தத்தம் கால்களை மடக்கியபடி.





தார்சாலைகள் ,வெந்நிற கோடுகள்


-------------------------------------------


வனங்களின் நடுவே


போடப்பட்ட தார்சாலைகள்


அதன் நடுவே


வலப்புறத்தையும் ,


இடப்புறத்தையும்


பிரித்துச் செல்லும்


வெந்நிறக் கோடுகள்


எப்போதும் அதன் மேலேறி நடந்து செல்கின்றன .


சில வரிக்குதிரைகள்


வரிகுதிரையின் மேலேறிச் செல்கின்றன . சில


தார்சாலைகள் ,சில வெந்நிற கோடுகள்




நடன ஒத்திகை


--------------------


37,38 யென


கடந்து கொண்டிருந்தது வயது .


முந்தைய நாள்


பள்ளி ஆண்டுவிழாவிற்கென


நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த


பதினொன்றாவது படிக்கும் மகள்


காலையில் பள்ளிக்குப் போனதும்


வீட்டில் யாரும் இல்லை


அப்பாடலை ஒலிக்க விடுகிறாள் .


தன் மகளை போலவே


உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்.


அழைப்பு மணியை யாரோ அடிக்கும்


ஓசை கேட்டதும்


வெளியேறினாள் தன் 15வயதிலிருந்து .




கற்களின் சாயல்


---------------------


எல்லா கற்களிலும்


ஏதோ உருவமொன்றின்


சாயல் தெரிகிறது .


இதுவரை அச்சாயல்கொண்ட


உருவங்களுக்கும் ,உங்களுக்குமான


சந்திப்புகள் நிகழ்ந்திருக்கவில்லை


இதுவரை


நீங்கள் சந்தித்த உருவங்களின்


சாயல் கொண்ட கற்கள்


வேறொருவனின் கைகளிலிருகின்றன .


இப்போது அவனுக்கான கற்கள் உங்களிடம்


இருப்பது போலவே .




பதிவேடு


-----------


பறவையொன்று


விட்டுச் சென்ற


சிறகொன்றையெடுத்துவந்து


உன் மைக்கூட்டில்


சொருகியிருக்கிறாய்


எப்போதேனும் சிறகுமுனையில்


மைதொட்டு உன் வாழ்க்கைக் குறிப்பை


எழுதி வைகிறாய்


உன் பதிவேடு காலியாயிருக்கிறது .


உன் குறிப்புகள் எப்போதும்


அந்தரத்தில் மிதந்தபடியிருக்கின்றன




உப்பளம்


------------


உப்பளத்தில் அமர்ந்து


அழுது கொண்டிருந்தாள்.


ஒருவன் அவள் அழுகையைப்


பிரித்துப்பிரித்து


பாத்திக்கட்டிக் கொண்டிருந்தான்.


சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தன


அவள் அழுகையை


வெவ்வேறு ஊர்களுக்கு


ஏற்றிச் செல்லவிருக்கும்


லாரிகள் ....


லாரிகள் ....








வண்ணத்துப்பூச்சி


---------------------


17வருடம் கழித்து பார்த்தேன்.


எதிர் திசையில்


அவள் மகளோடு போய்கொண்டிருந்தாள்


பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை .


அந்த கணம்


அவள் முகத்திலிருந்து


வயதான வண்ணத்துப்பூச்சியொன்று


வெளியேறி பறந்து செல்கிறது


வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி


சற்றே பதட்டமாய் .






பிரசவ வார்டு


---------------------


மருத்துவமனை பிரசவ வார்டில்


பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தன எறும்புகள்


ஈனும் வலியில்


"அம்...மா" வென அலறியது


பெண் எறும்பொன்று


அதே வார்டில்


பிள்ளைப் பெற்றிருந்தவளை


பார்க்க வந்திருந்தவர்கள்


எடுத்து வந்திருந்த பாட்டிலில்


ஹார்லிக்ஸை திருடிக்கொண்டிருந்தன


சில எறும்புகள்


பிள்ளைத்தாச்சிக்கென ...


பிள்ளைத்தாச்சிக்கென .

Thursday, May 21, 2009

காலச்சுவடு இதழ் 92 ல் வெளியான 3 கவிதைகள்



1



புத்தகத்தின்


73ஆம் பக்கம்


கிழிக்கப்பட்டிருக்கிறது


அதில்தான்


தம் கரும்புரவியை


மேய்ந்து வரும்படிக்கு


அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்


கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்


வாசகன்


குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்


தேடி அலைகின்றனர்


கிழிந்து விழுந்த கானகத்தில்.


2


முழுவதும்


வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து


பறவைகள் பறந்துவிடுமென எண்ணி


அதன்


சிறகுகளை மட்டும்


வரையாமல் விட்டு வைக்கிறாய்.


பின்னொருநாள்


வெறிச்சோடிக்கிடக்கிறது


பறவைகளற்ற ஆகாயம்.


காணாமல் போய்விட்டது

உன் தூரிகை.


3


மலையடிவாரத்திற்கு


மேய்ச்சலுக்குச் சென்ற


எருமைகள் திரும்புகின்றன


அந்த மாலையின் இறுதியில்


புறவழிச்சாலையின் வழியே


ஊருக்குள் நுழைகிறது


இருள்


தன் கழுத்து மணியோசையை


எழுப்பியபடியே.