ஆய்வறிக்கை
---------------------
வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்
தன் ஆய்வின் முடிவை சமர்பித்தான்
1137 வண்ணத்துப்பூச்சியின் வகைகளையும்
அதன் வாழ்வியல் கூறுகளையும்
பகுப்பாய்வு செய்து
அவற்றின் புகைப்படங்களையும்
அதில் இணைத்திருந்தான்.
பெயரும், புகைப்படமும் இல்லாத
1138வது வண்ணத்துப்பூச்சியொன்றையும்
அவனுக்குத் தெரியும்.
அதை அவன் தன் 16 வயதில் பார்த்தான்
அதே வண்ணத்துப்பூச்சியை சமீராவும் பார்த்தாள்.
அப்போது அவளுக்கு வயது 14.
குட்டிக் குழந்தை
----------------------
4வயது குட்டிக் குழந்தை
மிகக்குட்டியான உடையை உடுத்துகிறது.
தன் குட்டியான பாதங்களால்
குட்டியான அடிகளை எடுத்து வைக்கிறது
இப்பிரபஞ்சத்தின் மீது.
33வயது தந்தையின்
மிகப்பெரிய பூட்சுகளை அணிந்தபடி
பெரிய பெரிய அடிகளை
எடுத்து வைக்கமுயல்கிறது.
தந்தையின் பெரிய கால்சராயை
அணிந்து கொள்கிறது.
இடுப்பில் நிற்காத அக்கால் சராய்
அவிழ்ந்து அவிழ்ந்து விழுகிறது.
33 வயதிலிருந்து
4வயதிற்கு.
No comments:
Post a Comment