1
புத்தகத்தின்
73ஆம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில்தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்.
2
முழுவதும்
வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து
பறவைகள் பறந்துவிடுமென எண்ணி
அதன்
சிறகுகளை மட்டும்
வரையாமல் விட்டு வைக்கிறாய்.
பின்னொருநாள்
வெறிச்சோடிக்கிடக்கிறது
பறவைகளற்ற ஆகாயம்.
காணாமல் போய்விட்டது
உன் தூரிகை.
3
மலையடிவாரத்திற்கு
மேய்ச்சலுக்குச் சென்ற
எருமைகள் திரும்புகின்றன
அந்த மாலையின் இறுதியில்
புறவழிச்சாலையின் வழியே
ஊருக்குள் நுழைகிறது
இருள்
தன் கழுத்து மணியோசையை
எழுப்பியபடியே.
No comments:
Post a Comment