முயல்கள் ,கொக்குகள்
------------------------------
அரசு மருத்துவமனையின்
பழைய கட்டிட வராண்டாக்களில்
வெள்ளைநிற ஆடைகளை உடுத்தியபடி
தாதிகள் அங்கேயும் ,இங்கேயுமாய்
பரபரப்பாய் திரிகிறார்கள்
வெள்ளைநிற முயல்களை போல
எப்போதாவது மேலே வெந்நிற உடுப்போடும்
கீழே வேறு நிறமுடைய ஆடையோடும்
மருத்துவர்கள் வருகிறார்கள் , போகிறார்கள்
கையில் ஸ்டெதஸ்கோப்போடு
வெள்ளையாய் ,ஆரஞ்சு கால்களோடு
அலகில் குச்சிகளை கவ்வியபடி அலையும்
கொக்குகளைப் போல
பிரசவ வார்டிலிருந்து
முகம் மலர வெளியேறுகிறார்கள் தாதிகள்.
எப்போதாவது மருத்துவர்கள் .
கையில் வெந்நிற துணியால்
சுற்றிய குழந்தையோடு .
அப்போது முயல்கள் முயல் குட்டிகளோடு
கொக்குகள் குஞ்சுகளோடு
வெளிவருகின்றன
பிரசவவர்டில்லிருந்து .
விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .
5 comments:
அருமை நரேன்.
காட்சிப்படுத்துதலின் எளிமை உங்கள் பலம். ரசித்தேன்.
Please remove word verification. It is a headache no one will like to comment.
ம் ம்..நல்லா இருக்குங்க..
//முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை //
இதுதான் புரியாம மண்டை காயுது நரன்.
விநோத பறவை விநோதமான உணர்வுகளைத் தருகிறது.
அபாரம்!
முதலில் என்னை வியக்கவைத்தது உங்கள் மொழிநடை. அடுத்ததாக விவரணை. உங்களிடம் இருக்கும் நுண்பார்வை. அனைத்தும் அருமை. உரையாடல் அமைப்பின் உலகத் திரைப்படக் காட்சியில் நீங்கள் பேசியது இன்னும் நினைவிருக்கிறது. நானும் திரைப்படங்களைக் கொஞ்சம் கூர்ந்து அவதானிப்பவன். அத்தகைய இன்னுமொருவரைக் காணக்கிடைத்தது குறித்து மகிழ்ச்சி!
-ப்ரியமுடன்
சேரல்
Post a Comment