Friday, July 3, 2009

உயிர்எழுத்து இதழ் 25 ல் வெளியான எனது இரண்டு கவிதைகள்

ஊறுகாய் ஜாடி
-------------------
வீட்டில் பழமையான
ஊறுகாய் ஜாடியைப் போலிருந்த
பாட்டியென்ற வார்த்தை
உடைந்து போனது நேற்று .
அம்மா மாரடித்து அழுதாள் .
சிறிது காலத்திற்குப்பின்
அக்காவிற்கு குழந்தை பிறந்தது .
வேறொரு ஜாடியை
வாங்கிகொண்டுவந்து வைத்து போல
வீட்டில் மீண்டும்
பாட்டி என்ற வார்த்தை உருவானது .
மூன்று நாட்கள் இருந்துவிட்டு
அக்குழந்தை இறந்துவிட்டது .
இப்போது ஒரு குட்டிஜாடியும்
பெரியஜாடியும்
சேர்ந்தே உடைந்து போனது .


"க்ளிப்புகள்"
--------------
நீண்ட நைலான் கொடியில்
துணிகள் துவைத்து
உலர்த்தப் போட்டுக்கிடக்கிறது .
ஒட்டக நிறத்திலிருக்கும் மேலாடையையும்
அதன் இணைக்காய் கீழ் அணியும்
கருமந்தி நிறத்து "லீ" பிராண்ட் கால்சராயையும்
வெள்ளை வெளேரென்று
கொக்கின் நிறத்திலிருக்கும்
உள் பனியனையும் ,
கைகுட்டையையும் ,
முதலையின் வாயைப் போன்றிருக்கும்
"க்ளிப்புகள்" கவ்விக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில்
துண்டுதுண்டாய் காயப்போட்டுக் கிடக்கும்
என் உடலையும்
அது ஒரு சேர கவ்விக்கொண்டிருகிறது.

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஊறுகாய் ஜாடி என்னைச் சிலிர்க்க வைத்தது. க்ளிப்புகள் என்னைப் புன்னகைக்க வைத்தது ('ன' என்று சொல்லலாமோ?)

பிரத்தியேகக் கண்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா காட்சிகளைப் பதிவு செய்ய?

-ப்ரியமுடன்
சேரல்