Wednesday, September 9, 2009
Saturday, August 22, 2009
புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி
இந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் .
ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.
இந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும் சுற்றி அலைந்து
அங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் ,
நிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .அவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .தற்பொழுதுமதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி வளாகத்தில் "நான் மாட கூடல் " அரங்கில்
அவரின் ஒருங்கிணைப்பில் புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது .
தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .
- அன்புடன்
நரன்
www.narann.blogspot.com
K.T.காந்திராஜன்தொடர்புக்கு -9840166590
gandhirajan@yahoo.com
Tuesday, August 11, 2009
தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்
ஆணியும் இல்லாமல்
பிடிமானமும் இல்லாமல்
தொங்குகிறது .கண்ணாடி
நீ சிரிக்கிறாய்
உன் எதிரில் இருப்பவனும்
சிரிக்கிறான்.
********
ஓய்ந்ன் அருந்திய
கோப்பையின் அடியில்
எஞ்சி இருக்கும்
நூற்றண்டுக்கு முந்திய்
திராட்சை கொடியின்
சிறு பகுதி .
*************.
கிளையை பிடித்து தொங்காதே.
கிட்டத்தட்ட
127 ஆண்டுகள் பழையது இந்த மரம் .
ஆனால் அதன் இலைகள் அப்படி இல்லை.
***********
குட்டி தவளைகள்
குட்டி பூச்சியை வுன்க்கிறது
குட்டியான வாயால்
குட்டியான சப்தங்களை
எழுப்புகின்றது .
தம் குட்டியான கால்களால்
குட்டியான வுயரத்தை
குட்டியான நீளத்தை
தாவுகின்றன .
பெரிய தவளைகளும் அப்படியே
யாவற்றிலும் பெரிய ....
********
அவன் சிலநேரம்
காற்றில் அப்படியும் இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள் உதிர்கின்றன.
*****.
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
நூறாண்டுக்கு பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன்
நூறாண்டுக்கும் முன்
யாரோ புதைத்து வைத்த
ஓயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .
*****.
பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிற துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கி பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .
*****
கொஞ்சம் அரிசியையும்
கட்டு சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்
அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது
என்னால் அப்போதைக்கு .
*****
ஆறு மாதத்திற்கு பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் .....
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ .....
என் தியானம்
எப்படி கழியும் அமைதியுடன் .
*****
வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்து கொண்டிருக்காதே .
அதனதன் இயல்பிலிருக்கின்றன
பூக்கள் .
*****
வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பை
பற்ற வைத்தேன் .
மரங்கள் அவற்றை
தன் அருகிலிருக்கும்
துணைமரங்களுக்கு
கைமாற்றி விட்டு கொண்டிருந்தன .
*****
தொடர்ந்து இயற்கையை
அவதானித்துக் கொண்டிருந்தேன்....
.........தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம்
கையளித்துவிட்டுசெல்கிறேன் .
மரங்களும் தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருகின்றன .
*****.
என்னோடு
இந்த தியானவிரிப்பின்
மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது
கண்களை மூடி
தியானிக்கத் துவங்கினேன் .
தியானம் இப்போது
மூலையிலிருந்து .
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .
*****
தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து
வெவ்வேறு கிணறுகளிலிருந்து
வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ........
நான் குளித்த கிணற்றில்
நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் ...........
நான் குளித்த கிணற்றில் 27தவளைகளும் ,
நீர் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.
******
பனிப்பிரதேசத்தின் குளிர்காலை
ஏரியில் முழுக்க
நிரம்பியிருக்கின்றன கொக்குகள் .
உற்று நோக்குங்கள்
ஒரு கொக்குமில்லை .
*****
ஆரஞ்சு நிறம் குறைவாயிருக்கிறது .
கால்களை
நீருக்குள் அமிழ்த்தியிருக்கும்
கொக்குகளை வரைகிறான்
*****
உயிரோசை இதழ்-47ல் வெளியான கவிதை
Friday, July 3, 2009
உயிர்மை ஜூலை'2009 இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகள்
------------------------------
அரசு மருத்துவமனையின்
பழைய கட்டிட வராண்டாக்களில்
வெள்ளைநிற ஆடைகளை உடுத்தியபடி
தாதிகள் அங்கேயும் ,இங்கேயுமாய்
பரபரப்பாய் திரிகிறார்கள்
வெள்ளைநிற முயல்களை போல
எப்போதாவது மேலே வெந்நிற உடுப்போடும்
கீழே வேறு நிறமுடைய ஆடையோடும்
மருத்துவர்கள் வருகிறார்கள் , போகிறார்கள்
கையில் ஸ்டெதஸ்கோப்போடு
வெள்ளையாய் ,ஆரஞ்சு கால்களோடு
அலகில் குச்சிகளை கவ்வியபடி அலையும்
கொக்குகளைப் போல
பிரசவ வார்டிலிருந்து
முகம் மலர வெளியேறுகிறார்கள் தாதிகள்.
எப்போதாவது மருத்துவர்கள் .
கையில் வெந்நிற துணியால்
சுற்றிய குழந்தையோடு .
அப்போது முயல்கள் முயல் குட்டிகளோடு
கொக்குகள் குஞ்சுகளோடு
வெளிவருகின்றன
பிரசவவர்டில்லிருந்து .
விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .
உயிர்எழுத்து இதழ் 25 ல் வெளியான எனது இரண்டு கவிதைகள்
-------------------
வீட்டில் பழமையான
ஊறுகாய் ஜாடியைப் போலிருந்த
பாட்டியென்ற வார்த்தை
உடைந்து போனது நேற்று .
அம்மா மாரடித்து அழுதாள் .
சிறிது காலத்திற்குப்பின்
அக்காவிற்கு குழந்தை பிறந்தது .
வேறொரு ஜாடியை
வாங்கிகொண்டுவந்து வைத்து போல
வீட்டில் மீண்டும்
பாட்டி என்ற வார்த்தை உருவானது .
மூன்று நாட்கள் இருந்துவிட்டு
அக்குழந்தை இறந்துவிட்டது .
இப்போது ஒரு குட்டிஜாடியும்
பெரியஜாடியும்
சேர்ந்தே உடைந்து போனது .
"க்ளிப்புகள்"
--------------
நீண்ட நைலான் கொடியில்
துணிகள் துவைத்து
உலர்த்தப் போட்டுக்கிடக்கிறது .
ஒட்டக நிறத்திலிருக்கும் மேலாடையையும்
அதன் இணைக்காய் கீழ் அணியும்
கருமந்தி நிறத்து "லீ" பிராண்ட் கால்சராயையும்
வெள்ளை வெளேரென்று
கொக்கின் நிறத்திலிருக்கும்
உள் பனியனையும் ,
கைகுட்டையையும் ,
முதலையின் வாயைப் போன்றிருக்கும்
"க்ளிப்புகள்" கவ்விக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில்
துண்டுதுண்டாய் காயப்போட்டுக் கிடக்கும்
என் உடலையும்
அது ஒரு சேர கவ்விக்கொண்டிருகிறது.
Saturday, June 20, 2009
ZEN POEM -NARAN
no nails
no fixture
glass is hanging
you smile
The man in front
is also smiling.
zen poems
eat tiny insects
make tiny noise
with tiny mouth
jumps tiny heights
tiny lengths
with tiny legs.
Big frogs
are also same
everything
as big.
- by Bruce Ackerley, Christopher Allan, Kevin Bamford, Lance Calabrese, Terri Brown-Davidson, Reid Bush, David Callin, Michael Ceraolo, Eleanor Clare, Holly Day, Peter Day, Chris Deakins, Kevin Densley, Deborah Gordon, Mark Leech, Gary Lehmann, Genista Lewes, Paul Murphy, Naran, W. Dale Nelson, Carlos Nogueiras, Thomas Ország-Land, Matthew Porubsky, Miklós Radnóti, M. A. Schaffner, Tate Sherman, Nigel Smith, Jayne Stanton, Jocelyne Thébault, Carol Thistlethwaite, J.S.Watts and F.J. Williams
Wednesday, June 10, 2009
தமிழின் நேரடி ஜென் கவிதைகள்
****************
Monday, May 25, 2009
உயிரோசை இதழ் 39 ல் வெளியான எனது கவிதை
விண்ணப்பம்
----------------
மழையைப் பற்றியும்,
வெயிலைப் பற்றியும்
ஆய்வு மேற்கொள்பவன்
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .
மழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை
ஒரு மழை நாளில் நனைந்தபடியே
மேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .
அதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .
மேலதிகாரி
சில நாட்களுக்குப் பின்னர்
அக்கோப்பை எடுத்துப் பார்க்கையில்
மழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்
உலர்ந்து
வெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .
வெயில் பற்றிய அவனது ஆய்வுக் குறிப்புகளோடு
அலுவலகத்திற்குள்
அவன் நுழையத் துவங்கியதும்
வெயில் காணாமல் போய்
குறிப்புகளின் மேல்
நிழல் படியத் துவங்கி விடுகிறது .
பைத்தியத்தைப் போல கத்துகிறான் .
வெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று
ஒரு காகிதத்தை எடுத்து
மழை பற்றிய
ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்க
நீர்த்தொட்டியொன்றையும் ,
வெயில் பற்றிய
ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்க
மேல் கூரையற்ற
சிறிய அறையொன்றையும்
கட்டித்தருமாறும் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தான் .
Saturday, May 23, 2009
காலச்சுவடு இதழ்108 ல் வெளியான எனது கவிதை
-----------------
வேறொருவரைப் பார்க்கப் போயிருந்தேன்
வருவாரெனச் சொல்லி
நான்குபுறமும் கண்ணாடியால்
சூழ்ந்தஅறையொன்றில்
அமரவைத்தார்கள்.
உள்ளே என்னைப் போலவே
எல்லா திசைகளிலும்
ஒருவர் அமர்ந்திருந்தார்.
நடுவே அமர்ந்திருந்தஎன்னைப் பார்க்க
அவர் வந்தார் அறைக்கு
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேர் அவரோடு நுழைந்தார்கள் அறைக்குள்
நான் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்
என்னை போலவேயிருக்கும் நான்கு பேர்
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேரோடுபேசிக்கொண்டிருந்தார்கள்.
Friday, May 22, 2009
உயிரோசை இதழ் 8 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதைகள் -நரன்
1.அவன் சிலநேரம்
காற்றில்
அப்படியும் இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள் உதிர்கின்றன.
*****
2.
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
நூறாண்டுக்குப்
பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் .
நூறாண்டுக்கும் முன்
யாரோ புதைத்து வைத்த
ஒயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .
*****
3.
பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிறத் துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கிப் பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .
*****
4.
கொஞ்சம் அரிசியையும்
கட்டுச் சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்
அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது என்னால்
அப்போதைக்கு .
*****
5.
ஆறு மாதத்திற்குப் பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் .....
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ .....
என் தியானம் எப்படிக் கழியும்
அமைதியுடன் .
*****
6.
வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்துக் கொண்டிருக்காதே .
அதனதன்
இயல்பிலிருக்கின்றன பூக்கள் .
*****
7.
வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .
மரங்கள்
அவற்றை தன் அருகிலிருக்கும்
துணைமரங்களுக்கு கைமாற்றி
விட்டுக் கொண்டிருந்தன .
*****
8.
தொடர்ந்து
இயற்கையை அவதானித்துக்
கொண்டிருந்தேன்....
.........தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம்
கையளித்துவிட்டுசெல்கிறேன் .
மரங்களும்
தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .
*****
9.
என்னோடு
இந்த தியானவிரிப்பின் மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .
கண்களை மூடிதியானிக்கத் துவங்கினேன்
தியானம் இப்போது மூலையிலிருந்து
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .
*****
10.
தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து
வெவ்வேறு கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ........
நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் ...........
நான் குளித்த கிணற்றில்
27தவளைகளும் ,
நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.
உயிரோசை இதழ் 20 ல் வெளியான தமிழின் நேரடி ஜென் கவிதை -நரன்
உயிர்மை இதழில் வெளியான எனது 2 கவிதைகள்
ஆய்வறிக்கை
---------------------
வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்
தன் ஆய்வின் முடிவை சமர்பித்தான்
1137 வண்ணத்துப்பூச்சியின் வகைகளையும்
அதன் வாழ்வியல் கூறுகளையும்
பகுப்பாய்வு செய்து
அவற்றின் புகைப்படங்களையும்
அதில் இணைத்திருந்தான்.
பெயரும், புகைப்படமும் இல்லாத
1138வது வண்ணத்துப்பூச்சியொன்றையும்
அவனுக்குத் தெரியும்.
அதை அவன் தன் 16 வயதில் பார்த்தான்
அதே வண்ணத்துப்பூச்சியை சமீராவும் பார்த்தாள்.
அப்போது அவளுக்கு வயது 14.
குட்டிக் குழந்தை
----------------------
4வயது குட்டிக் குழந்தை
மிகக்குட்டியான உடையை உடுத்துகிறது.
தன் குட்டியான பாதங்களால்
குட்டியான அடிகளை எடுத்து வைக்கிறது
இப்பிரபஞ்சத்தின் மீது.
33வயது தந்தையின்
மிகப்பெரிய பூட்சுகளை அணிந்தபடி
பெரிய பெரிய அடிகளை
எடுத்து வைக்கமுயல்கிறது.
தந்தையின் பெரிய கால்சராயை
அணிந்து கொள்கிறது.
இடுப்பில் நிற்காத அக்கால் சராய்
அவிழ்ந்து அவிழ்ந்து விழுகிறது.
33 வயதிலிருந்து
4வயதிற்கு.
உயிரெழுத்தில் வெளியான எனது 9 கவிதைகள் -(oct-2008)
முதலை
----------
உப்புநீர் முதலையொன்று துயில்கிறது .
தலையை நீருக்குள்ளும் ,
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் துவங்கி
கோடைகாலம் வரை நீண்டிருந்தது .
கொக்குகள்
------------
வெந்நிற கொக்குகள்
பறந்தபடியிருகின்றன .
உயர ...உயர
மிகமிக உயர
இப்போது
வெந்நிற மேகங்கள்
பறந்தபடியிருகின்றன .
இறக்கைகளை அசைத்தபடி
தத்தம் கால்களை மடக்கியபடி.
Thursday, May 21, 2009
காலச்சுவடு இதழ் 92 ல் வெளியான 3 கவிதைகள்
1
புத்தகத்தின்
73ஆம் பக்கம்
கிழிக்கப்பட்டிருக்கிறது
அதில்தான்
தம் கரும்புரவியை
மேய்ந்து வரும்படிக்கு
அவிழ்த்துவிட்டிருந்தான் வீரன்
கிழிந்த பக்கத்தைத் தேடி அலைகிறான்
வாசகன்
குதிரையும் வீரனும் ஒருவரையொருவர்
தேடி அலைகின்றனர்
கிழிந்து விழுந்த கானகத்தில்.
2
முழுவதும்
வரைந்து முடிக்கப்பட்ட ஓவியத்திலிருந்து
பறவைகள் பறந்துவிடுமென எண்ணி
அதன்
சிறகுகளை மட்டும்
வரையாமல் விட்டு வைக்கிறாய்.
பின்னொருநாள்
வெறிச்சோடிக்கிடக்கிறது
பறவைகளற்ற ஆகாயம்.
காணாமல் போய்விட்டது
உன் தூரிகை.
3
மலையடிவாரத்திற்கு
மேய்ச்சலுக்குச் சென்ற
எருமைகள் திரும்புகின்றன
அந்த மாலையின் இறுதியில்
புறவழிச்சாலையின் வழியே
ஊருக்குள் நுழைகிறது
இருள்
தன் கழுத்து மணியோசையை
எழுப்பியபடியே.