1.அவன் சிலநேரம்
காற்றில்
அப்படியும் இப்படியுமாய்
வாளை வீசும்போது
அம்மரத்திலிருந்து
ஓரிரு இலைகள் உதிர்கின்றன.
*****
2.
எதிர்பார்த்தல் எதுவுமின்றி
நூறாண்டுக்குப்
பின்வருபவர்களுக்கும்
உபயோகமாய் வாழத் தீர்மானித்தேன் .
நூறாண்டுக்கும் முன்
யாரோ புதைத்து வைத்த
ஒயின் பீப்பாயை
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கும் போது .
*****
3.
பச்சைநிற வயற்பரப்பிலிருந்து
பச்சைநிறத் துண்டு வயற்பரப்புகள்
ஆகாசம் நோக்கிப் பறக்கின்றன
வசந்த காலத்தின்
ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள் .
*****
4.
கொஞ்சம் அரிசியையும்
கட்டுச் சுள்ளியையும்
கொடுத்து உதவினான் .
திரும்ப ஒரு புன்னகையை வழங்கினேன்
அவனுக்கு .
அது மட்டும் தான்
அது மட்டும் தான்
அளிக்க முடிந்தது என்னால்
அப்போதைக்கு .
*****
5.
ஆறு மாதத்திற்குப் பின்
இங்கே வந்திருக்கிறேன்
தியானத்திற்காய் .....
உதிர்ந்த இலைகள்
பொலிவிழந்த மரங்கள்
ஹோ .....
என் தியானம் எப்படிக் கழியும்
அமைதியுடன் .
*****
6.
வனாந்திரத்தில்
உதிர்ந்த பூக்களை மிதித்தபடி
மரத்திலிருக்கும் பூக்களை
ரசித்துக் கொண்டிருக்காதே .
அதனதன்
இயல்பிலிருக்கின்றன பூக்கள் .
*****
7.
வனத்தில் அமர்ந்து
சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .
மரங்கள்
அவற்றை தன் அருகிலிருக்கும்
துணைமரங்களுக்கு கைமாற்றி
விட்டுக் கொண்டிருந்தன .
*****
8.
தொடர்ந்து
இயற்கையை அவதானித்துக்
கொண்டிருந்தேன்....
.........தொடர்ந்து..
வயதாகி விட்டது .
என் மகனிடம்
கையளித்துவிட்டுசெல்கிறேன் .
மரங்களும்
தன் பங்கிற்கு
கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன .
*****
9.
என்னோடு
இந்த தியானவிரிப்பின் மூலையில்
ஓர் எறும்பும் அமர்ந்திருக்கிறது .
கண்களை மூடிதியானிக்கத் துவங்கினேன்
தியானம் இப்போது மூலையிலிருந்து
எறும்புகள் சாரைசாரையாய்
நகர்ந்து கொண்டிருந்தன
தியானத்தின் மேல் .
*****
10.
தியானத்திற்குப்பின்
மூன்று துறவிகளும்
ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .
குளித்து முடித்து
வெவ்வேறு கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .
முதல் துறவி சொன்னார் .
நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .
இரண்டாம் துறவி ........
நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.
மூன்றாம் ...........
நான் குளித்த கிணற்றில்
27தவளைகளும் ,
நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .
பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று
தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டனர்.